‘அதனால மட்டும் அவர் சாகல’... ‘கொரோனாவால் இறப்பதற்கு முன்’... ‘முதியவரும், குடும்பமும் சந்தித்த துன்பங்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 18, 2020 04:57 PM

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மும்பையை சேர்ந்த முதியவரும், அவரது குடும்பத்தினரும் சமூகத்தால் பெரும் மன உளைச்சலை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

mumbai dead man receives social discrimination rumour mongering

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கர்நாடகா, டெல்லியை சேர்ந்த முதியவர்கள் 2 பேர் இறந்தநிலையில், மும்பையை சேர்ந்த முதியவரும் 3-வதாக உயிரிழந்தார். இந்நிலையில், இந்த குடும்பம் சந்தித்த துன்பங்கள் வெளியாகி உள்ளன. மத்திய மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி துபாய் சென்றுவிட்டு இந்த மாதம் 5-ம் தேதி மும்பைக்குத் திரும்பியுள்ளார்.

அதன் பிறகு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அந்த முதியவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது முதல் இறக்கும் வரை அவர் சமூகத்தில் பலவிதமான மன உளைச்சல்களைச் சந்தித்ததாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். ‘அவருக்கு வைரஸ் தொற்று உறுதியான பிறகு தன் நெருங்கிய உறவினர்கள் முதல் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் வரை எனப் பலரின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார்.

அவர்தான் வைரஸைப் பரப்பியதாகப் பலரும் கடுமையாகக் குற்றம் சாட்டியதும் தெரியவந்துள்ளது. முதியவர் உயிரிழப்பதற்கு முன்னதாகவே அவர் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவின. அந்த மெசேஜ் அந்த முதியவருக்கே சென்றதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அவருக்கே மெசேஜ் சென்றால் அந்த நேரத்தில் முதியவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்றும், இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர் என்றும் முதியவரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதியவர் பற்றிப் பரவிய வதந்தியால் அவரது மகளும் பேரக்குழந்தைகளும் அவர்களின் பள்ளி மற்றும் வெளியிடங்களில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டடதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த முதியவர் காட்கோபர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அங்கு வந்த வேலையாட்கள், முதியவரை கவனித்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட யாருக்கும் தொற்று பரவவில்லை. ஆனால் அவருக்கு வைரஸ் உறுதியான தகவல் வெளியில் கசிந்ததும் வீட்டு வேலை செய்பவர்கள் முதல் பால், காய்கறி விற்பனை செய்பவர்கள் வரை அனைவரும் அவர் இருந்த குடியிருப்புக்கே வரப் பயந்துள்ளனர்.

இதனால் அங்கு வசிக்கும் 460 குடும்பங்கள் பெரும் சிரமமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து மும்பை மாநகராட்சியின் கமிஷனர் ப்ரவின் பர்தேசி கூறுகையில், ‘‘அந்த முதியவர் வைரஸ் தொற்றால் மட்டும் உயிரிழந்தார் என்று கூறிவிட முடியாது. அவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், தசைவீக்கம் போன்ற நோய்கள் இருந்தன. மற்றும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்த அவரின் இதயத்துடிப்பு உயிரிழப்பதற்கு முன் அதிகமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வுக்காக தகவல் பரப்புவது நல்ல விஷயம் என்றாலும், அதனை ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து அனுப்ப வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் நிலையாக உள்ளது.

Tags : #MUMBAI