லேசா தும்முனாலே 'தெறிச்சு' ஓடுறாங்களா?... கொரோனாவா இல்ல 'சாதாரண' ஜலதோசமானு எப்டி கண்டுபிடிக்கிறது?... 'செக்' பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 15, 2020 10:34 PM

இந்தியாவில் தற்போது கொரோனா வெகுவேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக வெளியிடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

How to find Normal cold or Coronavirus?, Details listed!

இந்த நிலையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது சாதாரண ஜலதோஷமா? இல்லை கொரோனா தொற்றா? என்பதை அறிவதற்கான எளிய விளக்கப்படம் ஒன்றை அமெரிக்காவுடன் இணைந்து உலக சுகாதார மையம் வெளியிட்டு இருக்கிறது.

அமெரிக்க நோய்த்தடுப்பு மையங்கள் மற்றும் தேசிய சுகாதார நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைபடம், கொரோனா தொற்று, புளு, ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றிற்கான அறிகுறிகளை வெளியிட்டு ஒருவருக்கு என்ன தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது.அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு, ஆம், இல்லை என பதிலளிப்பதன் மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை அறியலாம். அதுகுறித்த விரிவான விளக்கத்தினை கீழே காணலாம்.

கொரோனாவைக் கண்டறியும் கேள்விகள்:

*உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது முதல் கேள்வி. ஆம் என்றால், அது கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று. இல்லையென்றால் கொரோனா இருக்க வாய்ப்பு குறைவு.

*உங்களுக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில், அடுத்த கேள்வி, மூச்சு விட சிரமப்படுகிறீர்களா, முழுமையாக மூச்சை இழுத்துவிட முடியவில்லையா என்பது. ஆம் என்றால், உங்களுக்கு கொரோனா இருக்கலாம். இல்லையென்றால், உங்களுக்கு ஏற்பட்டிருப்பது புளுவாக இருக்கலாம்.

*கொரோனாவின் மற்ற அறிகுறிகள், இருமல், சோர்வு, பலவீனமாக உணர்தல் ஆகியவையாகும். அதே நேரத்தில் புளுவுக்கான அறிகுறிகளும் இவைதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.ஆகவே, இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

*ஒருவர் உடலில் கொரோனா கிருமிகள் நுழைந்து 2 முதல் 14 நாட்களுக்குள் அவர்களது உடலில் அறிகுறிகள் வெளிப்படையாக தோன்றத்தொடங்கும். அதேபோல், கொரோனா தொற்றிய அனைவருக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்றும் கூற முடியாது, அவை ஆளாளுக்கு மாறுபடும்.

*உங்களுக்கு ஏற்பட்டிருப்பது என்ன பிரச்சினை என்பதை உறுதி செய்ய ஒரு மருத்துவரால்தான் முடியும் என்பதால், இத்தகைய அறிகுறிகள் உடையவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இதேபோல கொரோனா பரவாமல் இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை தவறாமல் செய்யுங்கள்:-

* ஆல்கஹால் சார்ந்த சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.

* நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ உங்கள் முழங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுங்கள்.

* உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.

* தேவையற்ற பயணம் மற்றும் பெரிய கூட்டங்களை தவிர்க்கவும்.

* உங்கள் உள்ளூர் அல்லது தேசிய சுகாதார அதிகாரத்தின் ஆலோசனையுடன் இணைந்து செயல்படுங்கள்

* நம்பகமான தகவல்களைக் கண்டுபிடித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.