‘யாருக்கும் சந்தேகம் வராது’.. ‘கார் பின் சீட்டில் மகளின் சடலம்’!.. 80 கிமீ தூக்கிச் சென்று பெற்றோர் செய்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 22, 2020 06:19 PM

வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்த பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Marriage within same gotra, Delhi woman killed by family

டெல்லியை சேர்ந்த சீடல் சௌத்ரி (25) என்ற இளம்பெண் அப்பகுதியை சேர்ந்த அன்கிட் பாட் என்ற இளைஞரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சீடலின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் ஆர்யா சமாஜ் என்ற கோயிலில் வைத்து வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்துள்ளனர்.

இதனை அடுத்து இருவரும் அப்பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சீடலை அவரது பெற்றோர் தங்களுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர்களுடன் செல்ல சீடல் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சீடலை அங்கிருந்து கடத்தி சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் வைத்து சீடலை கொலை செய்துள்ளனர். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி கார் பின் சீட்டில் அமர்ந்தவாறு மகளை உட்காரவைத்துள்ளனர். இதனை அடுத்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கால்வாய் ஒன்றில் சீடலின் உடலை வீசியுள்ளனர்.

இதற்கிடையில் தனது மனைவியை காணவில்லை என அன்கிட் பாட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சீடலின் குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சீடலின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அப்போது பெற்ற மகளை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சீடலின் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.