"கொஞ்ச நேரத்துல வேர்த்துக் கொட்டிருச்சு!".. மருந்து வாங்க போனவர் சடலமாக வீடு திரும்பிய சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த முகமது கவுஸ் என்கிற 35 வயதான நபர் மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை போலீஸார் வழிமறித்து விசாரித்ததாகவும் மேலும் அவருடைய இரு சக்கர வாகனத்தின் சாவியை வாங்கிக்கொண்டு, அவரை சிறிது நேரம் அமர வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்குள் முகமது கவுஸ்க்கு உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரது உறவினர் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள், “நரசரைப்பேட்டை பகுதியில் புதிதாக சிலருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதால் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரி அவ்வழியே சென்ற முகமது கவுஸை விசாரித்தார். எனினும் காவலரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் அவருடைய வாகனத்தை அந்த காவலர் பறிமுதல் செய்து அவரை அமர வைத்ததார். ஆனால் அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டியது. பின்னர் அவருடைய உறவினர் வந்து அவரை அழைத்துச் சென்றார்” என்று கூறியுள்ளனர். இது குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இதில் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது கவுஸின் உறவினர் ஒருவர் இது குறித்து பேசுகையில், “மருந்து வாங்க மெடிக்கலுக்கு சென்ற முகமது கவுஸ், மருந்து சீட்டை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அதனால் அதை எடுத்துக்கொண்டு அவரை தேடி சென்றபோது அவர் காவலர்களின் முன்னிலையில் வியர்த்துக் கொட்டி மயக்கநிலையில் இருந்தார். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அரை மணி நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
