‘கொரோனா தொற்று’... ‘மிக மோசமான நிலையில் உள்ள நகரங்கள் இவைதான்’... ‘தீவிரமடையும் கட்டுப்பாடுகள்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை மேலும் தளர்த்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், சில நகரங்கள் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 17 ஆயிரத்து 545 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 567 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவின் சில குறிப்பிட்ட நகரங்களில் கொரோனா தொற்று மிக மோசமான நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், மகாராஷ்டிரத்தின் மும்பை மற்றும் புணே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, ஹௌரா, கிழக்கு மெதினாபுர், வடக்கு 24 பர்கனாஸ், டார்ஜலிங், கலிம்போங்க், ஜல்பைகுரி உள்ளிட்ட பகுதிகளில் சூழ்நிலை மிக மோசமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் பொதுமக்கள் மோசமான வைரஸ் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் 6 அமைச்சரவைகளை ஒன்றிணைத்து குழு ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இவர்கள் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிப்பர்.
இந்தக் குழுவினர் ஊரடங்கு முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்வர். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதை உறுதி செய்வர். இதற்கிடையில் மோசமான சூழ்நிலையில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது என்பது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும் அது எச்சரித்துள்ளது.
