'பச்சை மண்டலத்துக்கு முன்னேறிய தமிழக மாவட்டம்'... '24 நாட்களுக்குப் பின் திரும்பவும் பாதிப்பு'... வெளியான கொரோனா பரவல் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 24 நாட்களாக தொற்று இல்லாத மாவட்டமாக அறியப்பட்ட நீலகிரியில், புதிதாக நான்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அம்மாவட்ட மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்களுக்கு எப்படி பரவியது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின், நீலகிரியில் புதிய தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் நீலகிரியில் தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமானது. 21 நாட்களுக்கும் மேலாக அங்கு தொற்று இல்லாத நிலையில், ஆரஞ்சு மண்டத்தில் இருந்து பச்சை மண்டலத்தை நோக்கி சென்றது. இதனால் ஊரடங்கில் தளர்வு கொண்டு வரப்பட்டதால், மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர்.
இந்நிலையில், கோயம்பேடுக்கு காய்கறி ஏற்றி இறக்க வந்து சென்றவர்கள் மூலம், தமிழகத்தின் கடலூர், அரியலூர், விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்தது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய லாரி டிரைவர்கள் உள்பட 33 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் வந்தன. அதில் லாரி டிரைவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் அனைவருக்கும் 20 முதல் 42 வயது வரை இருக்கும்.
இதனால் சுமார் 24 நாட்களுக்குப் பின் கொரோனா தொற்று உறுதியானது அம்மாவட்ட மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, கோயம்பேடு சந்தைக்கு ஊட்டியில் இருந்து வந்து சென்றவர்களை கண்டறியும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளதோடு, அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல், தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் இருந்த ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரியிலும் இரண்டு மூதாட்டிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த தருமபுரியில் ஏப்ரல் 24-ம் தேதி முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், 10 நாட்களுக்கு பின் மீண்டும் தருமபுரியில் மற்றொரு நபர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
