'மே 4-ஆம் தேதி முதல் லாக்டவுன் நீட்டிப்பு!'.. 'இங்கெல்லாம் பேருந்துகள் இயங்கும்!'.. 'தனியார் நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம்!'.. ''மேலும் பல விபரங்கள் உள்ளே!'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 01, 2020 06:50 PM

நாடு முழுவதும் கொரோனாவால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 2 கட்ட ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டன. இதில் 2வது கட்ட ஊரடங்கு மே 3-ஆம் தேதி முடிவடைகிறது.  

Lockdown extended by two weeks from May 4th in India amid covid19

இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் பொது முடக்கம் மே 4-ஆம் தேதி முதல் மே17-ஆம் வரையிலான 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய நெறிமுறைகள் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களுக்கு ஏற்ப அமல்படுத்தப்பட இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு சிவப்பு மண்டலங்களுக்கு ஊரடங்கில் தளர்வில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை உட்பட சில மாநகராட்சிகள், சிவப்பு மண்டல பகுதிகளாக இருப்பதால் இப்பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தெரிகிறது. இதனால் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து அம்சங்களும், கல்வி நிறுவனங்களும், உணவகங்களும், மக்கள் கூடுவதற்கான நிகழ்ச்சிகள், திரையரங்குகள், சமூக-அரசியல்-கலாச்சார-மத நிகழ்வுகள் உள்ளிட்டவற்றின் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

அதே நேரத்தில் பச்சை மண்டலங்களில் 50 % இருக்கை வசதிகளுடன் பேருந்துகள் இயங்குவதற்கும், ஆரஞ்ச் மண்டலங்களில் டாக்சிகள் ஒரு டிரைவர், ஒரு பயணியுடன் இயங்கவும்,சிவப்பு மண்டலங்களில் ஐ.டி துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 33 % ஊழியர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், “கிராமப்புறங்களில் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகளை செய்யலாம். தங்கியிருந்து வேலை செய்பவர்களுடன் நகர்ப்புறங்களில் கட்டுமான பணிகளை தொடரலாம். சிவப்பு மண்டலங்களில் சலூன்கள், அழகுநிலையங்கள் இயங்குவதற்கான தடை நீடிக்கிறது. சிவப்பு மண்டலங்களில் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்கலாம். சிவப்பு மண்டலங்களில் சிறப்பு, ஏற்றுமதி மற்றும் தொழிற்பேட்டை மண்டலங்கள் இயங்கலாம். சிவப்பு மண்டலங்களில் சுயதொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் தொடரலாம். சரக்கு வாகன போக்குவரத்து சேவைக்கு தடை இல்லை. பச்சை மண்டலங்களில் 6 அடி சமூக இடைவெளியுடன் மதுக்கடைகள் மற்றும் பீடாக்கடைகளை திறக்கலாம்” உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.