'கொரோனாவை சுழற்றி அடிக்க வந்துட்டான் 'ராக்கி பாய்'... 'அமெரிக்க நிறுவனம் சொன்ன ஹாப்பி நியூஸ்'... பிறந்த புதிய நம்பிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார் என அமெரிக்க நிறுவனம் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா என்ற ஒற்றை சொல் மிரட்டி வருகிறது. வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள் என உலகத்தின் பல நாடுகளை கொரோனா ஆட்டம் காண வைத்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்கப் பல நாடுகளும், தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் சில மருந்துகள் சோதனை அடிப்படையில் உள்ளன. சில மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டுக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கொரோனா வைரசை 'ரெம்டெசிவிர்' மருந்து கட்டுப்படுத்துவதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 'கிலியட்' என்ற மருந்து நிறுவனம், இதுதொடர்பான தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், '' கொரோனா நோயாளிகளுக்கு முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. இதனால் இரண்டு வாரங்களில் பாதிப்பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
அதே நேரத்தில் ரெம்டெசிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனை தான் இறுதியானதும், முக்கியமானதும் ஆகும். தற்போது மருந்துக்கான அனுமதியைப் பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கிலியட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ரெம்டெசிவிர் மருந்தின் ஆய்வு முடிவுகளை மதிப்பீடு செய்த, தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ''கிலியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்து, மற்ற மருந்துகளை விட 31 சதவீதம் கூடுதல் பலனை அளித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு மற்ற மருந்துகளைக் கொடுக்கும் போது, அவர்கள் 15 நாட்களில் குணமாகிறார்கள். ஆனால் ரெம்டெசிவிர் மருந்தால் 11 நாட்களில் நோயாளிகள் குணமடைந்துள்ளதாகத் தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் தலைவர் ஆன்டனி பாயுசி கூறுகையில், ''ரெம்டெசிவிர் மருந்தின் மூலம், நோயாளிகளை மீட்பதற்கான நேரம் குறைந்துள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இதில் 100 சதவீதம் முன்னேற்றம் இல்லை என்றாலும், இந்த சூழ்நிலையில் 31 சதவிகித முன்னேற்றம் என்பது, இந்த மருந்தால் வைரசைத் தடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக'' அவர் கூறியுள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்தின் சோதனை முயற்சியானது, கடந்த பிப்ரவரி 21ம்தேதி தொடங்கிய நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் 68 இடங்களில் 1,063 பேருக்கு இந்த மருந்தானது கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த மருந்தை உட்கொள்ளும் போது எந்த வித, பக்க விளைவுகளும் ஏற்படாது என உறுதி செய்யப்படும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த பல பகுதிகளில் இந்த மருந்தானது பயன்படுத்தப்படும். அந்த நல்ல செய்தி விரைவில் வரும் என கிலியட் நிறுவனம் தெரிவித்துள்ளது.