கொரோனாவுக்கு எதிரான 'போர்ல' சாதிச்சிட்டோம்... அடுத்து நம்ம 'டார்கெட்' இதுதான்... வெளிப்படையாக அறிவித்த சீன அதிபர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | May 01, 2020 05:09 AM

நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என, சீன அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

China\'s battle against Coronavirus major strategic achievement

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கி போட்டுள்ளது. அதே நேரம் கொரோனாவில் இருந்து மீண்ட சீனா பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதை சீன அதிபர் ஜின்பிங்கின் சமீபத்திய பேச்சும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த சீனா நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தொடர் வருகின்ற 22-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், அதிபர் ஜின்பிங் பங்கேற்றார்.

இதில் அவர் பேசுகையில், ''கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போரில், சீனா மிகப்பெரிய போர்த்திற சாதனை படைத்துள்ளது. சீனாவின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இருப்பினும், உகான் நகரம் அடங்கிய ஹுபெய் மாகாணத்தில் சமுதாய பரவல் நிலையை எட்டிவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

ரஷியாவை ஒட்டிய ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில், ரஷியாவில் இருந்து திரும்பிய சீனர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அங்கும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும். வாகன உற்பத்தி தொழில்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.

வேளாண் உற்பத்தியை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டும். கஷ்டப்பட்டு படைத்த சாதனைகளை பாதுகாக்கும் வகையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருக்கக்கூடாது,'' என தெரிவித்து இருக்கிறார்.