‘கில்லி படம் பாத்து... மிளகாய் பொடியோடு வந்தோம்’.. சென்னையை அதிர வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 24, 2019 07:12 PM
சென்னையில் கொள்ளை அடிப்பதற்காக மிளக்காய் பொடி மற்றும் கத்தியோடு சுற்றிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சௌகார்பேட்டையில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்துள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 4 பேர் நின்றுகொண்டு இருந்துள்ளனர். உடனே அவர்களிடம் விசாரிக்க சென்றபோது தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திரா மாநிலம் நகரியை சேர்ந்த நவீன், புத்தூரை சேர்ந்த பவன், கொடுங்கையூரை சேர்ந்த பிரகாஷ், அரக்கோணத்தை சேர்ந்த கோபி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து தெரிவித்த போலிசார், சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்த மன்னன் என்வருக்காக நகைகளை திருட வந்துள்ளனர். மன்னன் நகை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தன்னுடைய நண்பரான சுரேஷ் (நவீனின் அண்ணன்) என்பவரிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார். சுரேஷ் கொடுத்த ஐடியாவின் அடிப்படையில் சௌகார்பேட்டை குமாஸ்தா என்பவரின் நகைகளை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். குமாஸ்தா, மன்னனின் தொழில் எதிரி என கூறப்படுகிறது.
குமாஸ்தா வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் நகைகளை ஆர்டர் எடுக்க சௌகார்பேட்டைக்கு பைக்கில் வருவார். அப்போது அவரது பைக்கில் நகைகளை வைத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த நகைகளை கொள்ளை அடிப்பதற்காக 4 பேரும் வந்துள்ளனர். ஆனால் முதல் கொள்ளை சம்பவம் என்பதால் எங்களிடம் மாட்டிக்கொண்டனர். 4 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்துக்கு உறுதுணையாக இருந்த நன்மங்கலம் ஆசிக், பெரம்பூர் அகரத்தை சேர்ந்த வினோத் மற்றும் திரு.வி.க நகரை சேர்ந்த மன்னன் ஆகியோரை கைது செய்துள்ளோம். மேலும் நவீனின் அண்ணன் சுரேஷை தேடி வருகிறோம்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த மிளகாய் தூள் பாக்கெட், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். எதற்காக மிளகாய் பொடி கொண்டுவந்தீர்கள் என விசாரித்ததில், ‘திருடும்போது சிக்கிக்கொண்டால் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிக்க திட்டமிட்டிருந்தோம். கில்லி படம் பார்த்தோம். மிளகாய் பொடி தூவினால் மோப்ப நாய் வராது என அதை கொண்டு வந்தோம்’ என தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
News Credits: Vikatan