‘அழுகாத சாமி, அம்மா எப்படினாலும் உனைய மேல் எடுத்துறேன்’.. ‘தாயின் பாசப்போராட்டம்’ மனதை உருக்கிய புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 26, 2019 02:24 PM
குழந்தையை மீட்பதற்காக தாய் கலாமேரி துணிப்பை தைக்கும் புகைப்படம் வெளியாகி அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.

திருச்சி அடுத்த மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் நேற்று மாலை 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறிவிழுந்தான். சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை தற்போது 70 அடிக்கும் கீழாக சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை பயப்படாமல் இருக்கு தாய் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தனர். அப்போது குழந்தையின் தாய் கலாமேரி, ‘‘அழுகாத சாமி, அம்மா எப்படினாலும் உனைய மேல் எடுத்துறேன். அம்மா இருக்கேன் பயப்படாதே’ என கூறினார். அதற்கு குழந்தை சுஜித் ‘ம்ம்’ என பதிலளித்தான்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த பிரத்யேக இயந்திரத்தை வைத்து குழந்தையின் கையில் கயிற்றால் சுருக்கு போட்டு மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒரு கையில் மட்டுமே சுருக்கு விழுந்ததால் மீட்பு பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. மேலும் குழியில் மண் சரிவு ஏற்பட்டு குழந்தை அசைவின்று காணப்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குழந்தையை துணிப்பையை வைத்து மீட்க மீட்பு குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அதனால் மீட்பு படையினரின் வேண்டுகோளை ஏற்று தாய் கலாமேரி துணிப்பை தைக்கு பணியில் ஈடுபட்டார். ஆழ்துளை கிணற்றுக்குள் போராடிக்கொண்டிருக்கும் தனது மகன் பத்திரமாக மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் துணிப்பை தைக்கும் தாய் கலாமேரியின் புகைப்படம் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. தற்போது 33 பேர் கொண்ட தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் குழந்தை மீட்க சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
