'பாத்ரூம் போணும், பைக்க நிறுத்துங்கன்னு சொன்ன மனைவி'... 'திரும்பி பார்த்தபோது கணவன் கண்ட காட்சி'... ஒரு நொடியில் நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியை சேந்தவர் பூர்ணிமா. இவரது கணவர் கெம்பண்ணா. விவசாயம் செய்து வரும் இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. தேமஹள்ளி கிராமத்தில் வசித்து வந்த இந்த தம்பதியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தான் சென்று கொண்டிருந்தது. கெம்பண்ணா நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த நிலையில், அவர் சிறிது நஷ்டத்தைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இதேகாரணமாக அவ்வப்போது பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது கணவன், மனைவிக்குள் அவ்வப்போது பிரச்சனையாகவும் வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் பூர்ணிமா தனது கணவர் கெம்பண்ணாவிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்குக் குழந்தையுடன் சென்றுவிட்டார். மனைவி சென்றதால் சோகத்திலிருந்த அவர், இனிமேல் நமக்குள் பிரச்சனை எதுவும் வரக் கூடாது, என முடிவு செய்துவிட்டு தனது மாமியார் வீட்டிற்குச் சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
பூர்ணிமாவும் கணவருடன் செல்ல சம்மதித்து, தனது 3 வயதுக் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தேமஹள்ளி கிராமத்திற்குப் புறப்பட்டனர். கெம்பண்ணா மோட்டார் சைக்கிளை ஓட்ட, பூர்ணிமா குழந்தையுடன் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் தேமஹள்ளி கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பூர்ணிமா திடீரென இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து கெம்பண்ணா மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தியுள்ளார்.
அங்கு இருந்த மறைவான இடத்திற்குத் தனது இயற்கை உபாதையை மனைவி பூர்ணிமா கழிக்கச் சென்ற நிலையில், குழந்தையை பைக்கில் அமர வைத்து விட்டு மனைவிக்குத் துணையாக அவரும் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் சென்றவர்கள், குழந்தை மட்டும் தனியாக பைக்கில் இருக்கிறதே என வந்து பார்த்துள்ளார்கள். அப்போது சற்று தள்ளி நின்ற கெம்பண்ணா அது என்னுடைய குழந்தை தான் எனக் கூறிவிட்டு தனது மனைவியைப் பார்த்துள்ளார்.
அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. அங்கு ஓடிக்கொண்டிருந்த கபினி ஆற்றுக்குச் சென்ற பூர்ணிமா, கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றில் குதித்து விட்டார். உடனடியாக தனது மனைவியைக் காப்பாற்றும் நோக்கில், கெம்பண்ணா ஓடிப் போய் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் 2 பேரும் ஆற்றில் மூழ்கிப் பலியானார்கள். இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்புத் துறையினருடன் விரைந்து வந்த அவர்கள், கெம்பண்ணா மற்றும் பூர்ணிமாவின் உடல்களை மீட்டனர். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனையில், ஒரு நொடி அவசரப்பட்டு மனைவி எடுத்த முடிவினால் இன்று அந்த குழந்தை அனாதையாகியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.