"கழுத்துக்குக் கீழ் பகுதியெல்லாம் தீயில வெந்துபோச்சு!".. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களால் நேர்ந்த கோரம்!.. இதயத்தை ரணமாக்கிய தாயின் வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் ஒரே ஊரைச் சேர்ந்த 5 இளைஞர்கள், நட்பாகப் பழகிப் பாலியல் தொந்தரவு அளித்ததால் 17 வயதுச் சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ஒருவர், 10-ம் வகுப்பு முடித்துவிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடன் வழங்குவது தொடர்பாக கிராமம் கிராமமாகச் சென்று குழுக்களைச் சந்தித்து வருவாராம். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், வேல்சாமி, குகன், உதயகுமார், கருப்பசாமி ஆகிய 5 பேரும் நண்பர்களாக அறிமுகமாகிப் பேசி வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களின் செல்போனிலிருந்து தனித்தனியாக பாலியல் ரீதியாக எஸ்.எம்.எஸ் அனுப்பி வந்துள்ளனர். தெரியாத எண்களிலிருந்து தொடர்ந்து வந்த எஸ்.எம்.எஸ்களால் மொபைல் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்.
தொடர்ந்து, அச்சிறுமி பணிக்குச் செல்லும் இடங்களுக்குச் சென்றும் பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளனராம். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி அச்சிறுமி வீட்டில் இருந்த போது சரவணன், சிறுமியின் எண்ணுக்கு போன் செய்து "வீட்டை விட்டு வெளியே வராவிட்டால் வீட்டோடு கொளுத்திடுவேன்" என மிரட்டல் விடுத்ததுடன், சிறுமியின் வீட்டின் முன்பும் சத்தம் போட, பயந்து போன சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அச்சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸாரிடம் அச்சிறுமி அளித்த வாக்குமூலத்தில், "மகளிர் குழுக்களுக்குக் கடன் கொடுக்குறது தொடர்பா ஒவ்வொரு கிராமமா போயி, குழுத்தலைவிகளைச் சந்திச்சு பேசிட்டு வரும்போதுதான் அந்த 5 பேரும் அறிமுகமானாங்க. ஆரம்பத்துல இயல்பாத்தான் பேசுனாங்க. தொடர்ந்து, ஒவ்வொருத்தரும் அவரவர் போன் நம்பர்ல இருந்து ஆபாசமா மெசேஜ் அனுப்பினார்கள். அஞ்சு பேரையும் எச்சரிச்சு போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன். தொடர்ந்து, தெருவில் நடந்துபோகும் போதும் ஆபாசமா பேசினாங்க.
கடந்த 8-ம் தேதி வீட்டுல நான் மட்டும்தான் தனியா இருந்தேன். சரவணகுமார் வீட்டுவாசலில் வந்து நின்னு, "செல்போனை எதுக்கு ஆப் பண்ணி வச்ச? ஒழுங்கா ஆன் பண்ணு. நாளைக்குக் காலையில போன் பண்ணுவேன். நாங்க கூப்பிடுற இடத்துக்கு வரணும். இல்லேன்னா உன்னையும் உன் குடும்பத்தையும் கூண்டோட தீ வச்சுக் கொளுத்திடுவேன்"ன்னு சொல்லி சத்தம் போட்டான். அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் பார்த்தாங்க. எனக்கு அவமானமாயிடுச்சு. அதனால, அவமானத்துல மண்ணெண்ணெய ஊத்தித் தீயை வச்சுட்டேன்" என்றார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் பத்ரகாளியிடம் பேசினோம், "அந்த அஞ்சு பசங்களும் தப்பா பேசுனாங்கன்னு என் மகள், எங்கிட்ட சொன்ன போதே இனிமேல் அவங்கட்ட பேசாதம்மான்னு சொன்னேன். உடனே செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டா. அந்தப் பசங்கதான் தொடர்ந்து தப்பா பேசியிருக்காங்க. 8-ம் தேதி நான் உப்பளத்துக்கு வேலைக்குப் போயிட்டேன். வீட்ல யாரும் இல்லேன்னு தெரிஞ்சுதான் அந்தப் பையன் சரவணகுமார் வந்து இப்படிப் பேசிட்டுப் போயிருக்கான். கழுத்துக்குக் கீழ் பகுதியெல்லாம் தீயில வெந்து போச்சு" என்றார் கண்ணீருடன்.
