‘கொன்று நன்றி தெரிவித்துவிட்டனர்’.. ‘சேவை செய்த மருத்துவருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 02, 2019 11:11 PM
அஸ்ஸாம் மாநிலத்தில் மருத்துவர் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஜோர்ஹட் என்ற தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 73 வயதான தேபன் தத்தா என்ற ஓய்வு பெற்ற மருத்துவரை பணியில் அமர்த்தியுள்ளது நிர்வாகம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 33 வயதான சுக்ரா மாஜி என்ற தொழிலாளிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மற்ற தொழிலாளர்கள் அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட அங்கு மருத்துவர், பிற ஊழியர்கள் யாருமே இல்லாமல் இருந்துள்ளனர்.
இதற்கிடையில் சுக்ரா மாஜிக்கு உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு பிற்பகலில் தான் மருத்துவர் தேபன் தத்தா மருத்துவமனைக்கு வந்துள்ளார். தேபன் தத்தாவை பார்த்ததில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். சுமார் 250 பேர் சேர்ந்து வயதான அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் சிலர் கூர்மையான கண்ணாடிகளைக் கொண்டும் கீறியுள்ளனர். இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவர் தாக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவரை தாக்கி கொலை செய்தது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அம்மாநில மருத்துவர்கள் நலச்சங்கம், “தேபன் தத்தா தனது பணிக்காலம் முடிந்தும் அங்குள்ள தொழிலாளர்களுக்காகத்தான் தொடர்ந்து வேலை செய்து வந்தார். ஆனால் அவர்கள் அவரைக் கொலை செய்து நன்றி தெரிவித்துவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளது.