‘அப்பவே அவரு சொன்னதை கேட்டிருந்தால்’... ‘கொரோனா குறித்து எச்சரித்த இளம் மருத்துவரிடம்’... ‘இறுதியாக சீன அரசு எடுத்த முடிவு’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Mar 20, 2020 04:13 PM

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பே அந்த வைரஸ் குறித்து எச்சரித்த இளம் மருத்துவர் லீ வென்லியாங் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அதிதீவிரமாக பரவியநிலையில், தற்போது அவரது குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்புகோரி இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

Wuhan police apologized to the whistleblower DR Li Wenliang Family

உலகம் எங்கும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், தற்போது இவரிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. ஆம், இது தொடர்பாக உகான் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லீ வென்லியாங்தான் எங்களுக்கு கொரோனா குறித்து முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதவி செய்தோம். நாங்கள் செய்த தவறு இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது.

அவர் சொன்ன போதே நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். உடனே செயல்பட்டு இருந்தால் நாங்கள் வைரஸ் பரவுவதை தடுத்து இருக்க முடியும். பலர் பலியாகி இருக்க மாட்டார்கள். ஆனால் முடியாமல் போய்விட்டது. மக்களுக்காக உயிர் துறந்த ஹீரோ லீ வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அவரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறோம். இவரது குடும்பத்துக்கு தக்க இழப்பீடு வழங்கப்படும்’ என்று கூறியுள்ளது.

சீனாவில் இருக்கும் உகான் மத்திய மருத்துவமனையில்தான் லீ வென்லியாங் என்ற 34 வயதான கண் மருத்துவர் வேலைப் பார்த்து வந்தார். இவர் அங்கு பணியாற்றும் போது கடந்த டிசம்பர் முதல் வாரத்தில், காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கி இருக்கிறது. இந்த வைரஸை சோதித்த லீ வென்லியாங் அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்து, உடனடியாக மருத்துவர்கள் இருக்கும் வீ சாட் குரூப் ஒன்றில் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார். லீ வென்லியாங் அளித்த மெடிக்கல் ரிப்போர்ட்களை பார்த்து, சீன மருத்துவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு, மக்களுக்கு இவர்தான் உண்மையை அறிவித்தார்.

ஆனால் கொரோனா வைரஸை முன்பே கண்டுபிடித்த இவரை சீன அரசு பாராட்டாமல், முடக்கியது. இவருக்கு எதிராக சீன அரசு வழக்கு தொடுத்தது. இந்த வைரஸ் குறித்து எதுவும் பேச கூடாது. யாரிடமும் விவாதிக்க கூடாது. சமூக வலைத்தளங்களில் குறிப்பிடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். அதோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

இதற்கிடையில் கொரோனா வேகமாக பரவ, கடந்த ஜனவரி 10-ம் தேதிக்கு முன்பாக, கொரோனா தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு லீ வென்லியாங் சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பிப்ரவரி 7-ம் தேதி கொரோனா வைரஸால் இவர் தாக்கப்பட்டு பலியானார். இவரை தற்போது சீன மக்கள் தங்களின் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.

Tags : #WUHAN #DOCTOR #LI WENLIANG #CHINA