டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா உறுதி!... மற்றவர்களை தேடும் பணி தீவிரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 06, 2020 04:27 PM

இந்தியா முழுவதும், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில் இதுவரை 1,023 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

centre searches for the rest of delhi jamaat participants

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் டெல்லியில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை மீறி நிஜாமுதீன் மசூதியில் தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் 17 மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 1,023 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதமாகும்.

இதனிடையே, இந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை தேடும் பணி நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மாநாட்டில் பங்கேற்றவர்களை செல்போன் ஜிபிஎஸ் மூலமாக தேடும் பணியில் டெல்லி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

நிஜாமுதீன் மசூதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் நீண்ட நாட்களாக தங்கியிருந்தவர்களை அவர்களின் செல்போன் ஜிபிஎஸ் மூலமாக அடையாளம் கண்டு வருகிறோம். அவர்கள் டெல்லியில் இருக்கும்பட்சத்தில் நாங்களே அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துகிறோம்.

அவர்கள் வேறு மாநிலங்களில் இருந்தால் அந்தந்த மாநில போலீஸாருக்கு தகவல் அளித்து விடுவோம். அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று அவர்களை கண்டுபிடித்து மருத்துவ சோதனை நடத்துவார்கள் என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.