அன்னைக்கு ‘தோனி’ சொன்ன அட்வைஸை நான் கேட்கல.. முதல் ‘இரட்டை சதம்’ அடித்த சம்பவத்தின் ‘சீக்ரெட்’ சொன்ன ரோஹித்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்தபோது களத்தில் தோனி கூறிய அறிவுரையை நிராகரித்ததாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். இதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியில் மேலும் இரு இரட்டை சதங்களை விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 இரட்டை சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் முதல் இரட்டை சதம் அடிக்கும்போது களத்தில் தோனி கூறிய அறிவுரையை தான் நிராகரித்ததாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில் ரோஹித் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். அதில்,‘நான் அன்றைய போட்டியில் இரட்டை சதம் அடிப்பேன் என நினைக்கவில்லை. அந்த போட்டியில் ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். அதனால் எனக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டது. பின்னர் சுரேஷ் ரெய்னாவும், நானும் ஜோடி சேர்ந்து விளையாடினோம். ரெய்னா அவுட்டானதும் தோனி களத்துக்கு வந்தார்.
அப்போது தோனி என்னிடம் வந்து, நீ ஆரம்பத்தில் இருந்து களத்தில் இருக்கிறாய். கடைசி வரை நீ களத்தில் இருக்க வேண்டும். இப்போது உன்னால் எந்த பந்தையும் விளாச முடியும். ஆனால் நீ 50-வது ஓவரை வரை விளையாட வேண்டும். நீ பொறுமையாக விளையாடு, கிடைக்கின்ற இடைவெளியில் பவுண்ட்ரிகளை விளாசு என அடிக்கடி வந்து சொன்னார். ஆனால் நான் அவர் சொல்வதைக் கேட்கவில்லை. கிடைக்கும் பந்துகளை எல்லாம் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினேன்’ என ரோஹித் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.
அப்போட்டியில் ரோஹித் ஷர்மா 12 பவுண்ட்ரிகள், 16 சிக்ஸர்கள் என 158 பந்துகளில் 208 ரன்களை குவித்து 49-வது ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி 38 பந்துகளில் 62 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.