'திறந்த' லாரியில் தொழிலாளர்கள் 'சடலங்களுடன்' பயணம்... ஒட்டுமொத்த நாட்டையும் 'உலுக்கிய' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நான்காம் கட்டமாக நீடிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர் நடந்தும், லிப்ட் கேட்டும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வந்த தொழிலாளர்கள் 26 பேர் உயிரிழந்தனர். 30 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது. நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நடந்த அடுத்த நிகழ்வு ஒன்று மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த தொழிலாளர்களில் 11 பேர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களாவர். இதனைத் தொடர்ந்து அந்த 11 பேரின் உடலை தார்பாலின் சுருட்டி திறந்த வெளி லாரி ஒன்றில் வைத்து உத்தரப்பிரதேச அரசு, ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதே லாரியில் தான் விபத்தில் காயம் அடைந்தவர்களும் வந்துள்ளனர். ஜார்கண்ட் செல்லும் வழியில் இந்த லாரி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த சம்பவத்திற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'வெளிமாநில தொழிலாளர்களுக்கு மனிதாபிமானமற்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சடலங்களை லாரியில் அனுப்புவதை தவிர்த்து உத்தரப்பிரதேச அரசு முறையான ஏற்பாடு செய்து அதனை ஜார்கண்டிற்கு அனுப்பியிருக்கலாம். சடலங்கள் ஜார்கண்ட் எல்லைக்கு வந்த பின் அதற்கு உரிய மரியாதையளித்து சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்' என தெரிவித்தார்.
இதனையடுத்து லாரியில் இருந்த சடலங்கள், உடனடியாக ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஊரடங்கின் காரணமாக நாள்தோறும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.