லாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | May 17, 2020 11:34 PM

லாரியில் இருந்து பாதியில் இறக்கி விடப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

Lockdown 4.0: Friend’s gesture in vain; Picture Goes Viral

ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் நடந்து, சைக்கிளில், லாரிகளில் என பல்வேறு வழிகளில் தமது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சொந்த ஊருக்கு பயணம் செய்த இளைஞர் ஒருவர் நடுவழியில் இறக்கி விடப்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அம்ரித், யாகூப் இருவரும் வேலை தேடி குஜராத் வந்தவர்கள். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல 4000 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி லாரி ஒன்றில் பயணம் செய்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வேறு வழியின்றி நின்றுகொண்டே பயணம் செய்து இருக்கின்றனர். இதில் அம்ரித்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கி விட்டுள்ளனர். யாகூப்பும் நண்பனுடன் சேர்ந்து இறங்கி விட்டார். உடல்நலம் குன்றிய அம்ரித் லாரியில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே மயக்கமடைய, அவரை மடியில் வைத்துக்கொண்டு யாகூப் வழியில் போவோர்களிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து  உள்ளூர் மக்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

அம்ரித்தை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து உடனடியாக வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அம்ரித் உயிரிழந்துள்ளார். நண்பனை மடியில் கிடத்தியவாறே யாகூப், உதவி கேட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.