"ஆமா..நாங்கதான் கொன்னோம்!".. 'பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!'.. சிக்கிய குழந்தையின் தந்தையும், பாட்டியும்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 18, 2020 07:56 AM

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டுத்தெரவைச் சேர்ந்த தவமணி - சித்ரா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் 4வதாக கர்ப்பமடைந்த சித்ராவுக்கு கடந்த 10ம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.

father and grandmother killed new born girl baby in madurai

இந்த நிலையில் பிறந்து 5 நாளே ஆன அந்த பெண் குழந்தை திடீரென இறந்ததை அடுத்து, குழந்தையின் உடலை சோழவந்தான் பழைய காவலர் குடியிருப்பின் பின்பக்கம் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் புதைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் குழந்தையின் மர்ம சாவு குறித்து உறவினர்களிடம், பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தந்தை தவமணி மற்றும் தவமணியின் தாயார் பாண்டியம்மாள் இருவரும், “நாங்கள் தான் குழந்தையை கொன்று புதைத்தோம்” என்று கூறி அதிர வைத்தனர்.

குழந்தையின் தந்தை தவமணி 4வதாகவும் தனக்கு பெண் குழந்தை பிறந்தை அடுத்து, அதனைக் கொன்றுவிட முடிவு எடுத்து தன் மனைவி சித்ரா குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு மற்ற குழந்தைகளுடன் வீட்டின் வெளியில் இருந்த சமயம் பார்த்து, தவமணியும் அவரது தாயார் பாண்டியம்மாளும் வீட்டுக்குள் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு பாட்டிலில் எடுத்துச் சென்ற கள்ளிப் பாலை குழந்தைக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். பின்பு குழந்தையின் கால்களைப் பிடித்து தரையில் ஓங்கி அடித்துள்ளனர். இந்த கொடூர செயலால் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆனால் குழந்தை உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடி இவர்கள் குழந்தையை புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த விஏஓ அளித்த புகாரின் பேரில் ஆர்டிஓ முருகானந்தம் தலைமையிலான மருத்துவ குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டியதோடு, போலிசாரின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் விசாரணையில் தவமணி மற்றும் பாண்டியம்மாள் இருவரும் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.