'ஆன்லைன் வகுப்புக்கான மொட்டை மாடி அறையில் இரட்டைச் சகோதரிகள் விபரீத முடிவு!'.. "உப்பு.. காரம் அதிகம் போடுவாங்க".. 'தாயின்' மோசமான சமையல் 'காரணமா?'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 20, 2020 08:36 AM

வேலூரை அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் மாருதி நகரைச் சேர்ந்த ‘சிவில் இன்ஜினியர்’ பாலசுப்பிரமணியன் மற்றும் கௌரி தம்பதிக்கு பத்மப்ரியா, ஹரிப்பிரியா என்கிற 17 வயது உடைய  இரட்டை மகள்களும், பத்மகுமார் என்கிற மகனும் உள்ளனர். மகள்கள் இருவரும் அங்கிருந்த தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு முடித்துவிட்டு பன்னிரெண்டாம் வகுப்புக்காக காத்திருந்தனர்.  மகன் பத்மகுமார் காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது

twin sisters dead by hanging in while attending online class from home

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஆன்லைன் மூலமாக பிளஸ் டூ சிறப்பு வகுப்புகளை மாணவ இரட்டைச் சகோதரிகள் பத்மபிரியா, ஹரிப்பிரியா இருவரும் மொட்டை மாடியில் இருந்த அறை ஒன்றுக்குச் சென்று அங்கிருந்து கவனித்து வந்தனர். இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று நடந்த ஆன்லைன் வகுப்பினை கவனிப்பதற்காக காலை 9.30 மணிக்கு மாணவிகள் இருவரும் மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். பின்னர் மதியம் நீண்டநேரமாகியும் சாப்பிடுவதற்காக கீழ் தளத்துக்கு இந்த இரட்டைச் சகோதரிகள் இறங்கி வராததால் மகள்களை அழைத்து வருவதற்காக, தாய் கௌரி மாடிக்குச் சென்று பார்த்தபோது அதிர்ந்துள்ளார்.

ஆம், அங்கு மாணவிகள் இருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்து, சந்தேகமடைந்து ஜன்னலை திறந்து பார்த்துள்ளார் கௌரி. அப்போதுதான் இருவரும் தூக்கிட்டு தொங்கிய நிலையில், சடலமாக இருந்ததை பார்த்து கௌரி அதிர்ச்சி அடைந்தார். உடனே கௌரி கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். பின்னர் உடனடியாக காட்பாடி போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவலர்கள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ததோடு, இரட்டை சகோதரிகளின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்பொழுது, மாணவிகளின் தாய் கௌரி அதிகமான காரம், உப்பு சேர்த்து உணவினை மோசமாக செய்வதால் மகள்களுக்கும் கௌரிக்கும் அடிக்கடி தகராறு வந்து கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த தகாரறுதான் மாணவிகளின் தற்கொலைக்கு காரணமா? அல்லது  ஆன்லைன் வகுப்பு தொடர்பாக பள்ளி தரப்பில் ஏதேனும் பிரச்சனை இருந்ததா? என்கிற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.