தம்பி சூடா ஒரு 'டீ' ... ஆமா யாரு 'நீங்க'?... நான் 'கொரோனா' பேஷண்ட் பா... சுத்தி நின்னவங்க எல்லாம் 'தெறிச்சு' ஓடிட்டாங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் அருகே மருத்துவமனையில் இருந்த 73 வயது கொரோனா நோயாளி ஒருவர், தேநீர் குடிக்க வேண்டி மருத்துவமனைக்கு அருகில் இருந்த டீ கடைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு அவரது பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அந்த நபரை ஆம்புலன்சில் சிகிச்சைக்காக மைசூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், அந்த அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைக்க வேண்டி சுமார் 3 மணி நேரம் ஆம்புலன்சில் முதியவர் காத்திருந்ததாக தெரிகிறது. காலை 5 மணி முதல் ஊழியர்களிடம் அந்த முதியவர் டீ கேட்டு வந்துள்ளார். தொடர்ந்து, காலை 7:30 மணி முதல் தேநீர் கிடைக்காத நிலையில், தனது கையில் மாட்டப்பட்டிருந்த டியூப்களை அகற்றி விட்டு மருத்துவமனையின் வெளியே இருந்த டீக்கடை ஒன்றில் தேநீர் அருந்த சென்றுள்ளார்.
அப்போது அந்த முதியவர் தேநீர் அருந்தி கொண்டிருக்கையில், அங்கு தேனீர் குடிக்க வந்திருந்த மற்றொரு நபர், முதியவரின் கையிலிருந்த பிளாஸ்திரியை பார்த்து அதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த முதியவர். 'நான் கொரோனா நோயாளி. மருத்துவமனையில் தேநீர் கிடைக்காததால் அருந்த வேண்டி இங்கு வந்தேன்' என தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டதும், டீ கடையில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் பதறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். 'அந்த முதியவரின் பதிலைக் கேட்டு என் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த 7 - 8 பேர் பயத்தில் தேநீர் கப்பை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். அதற்கான காசையும் அவர்கள் தரவில்லை. முதியவரால் எனது கடையை அடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என அந்த டீ கடைக்காரர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சில தினங்களுக்கு அந்த முதியவருக்கு உடல்சோர்வு ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவரது உறவினர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் மைசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு படுக்கை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்சில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை விழிப்புடன் இருந்திருந்தால், இப்போது மற்றவர்களுக்கும் கொரோனா ஏற்படும் அபாயம் இருந்திருக்காது. மருத்துவமனை அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முதியவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தொடர்ந்து பல மணி நேர காத்திருப்புக்கு பின்னர் முதியவருக்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.