"ரொம்ப நாளா கஸ்டமர்ஸ் கேட்டுகிட்டே இருந்தாங்க.. இதுதான் சரியான நேரம்!".. 'ஸ்விகி, ஜொமோட்டோ-வுக்கு' போட்டியாக 'கோதாவில்' குதித்த 'பிரபல ஆன்லைன் ஷாப்பிங்' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவைப் பொருத்தவரை, ஸ்விகி மற்றும் ஜொமோட்டோ உணவு டெலிவரி நிறுவனங்கள் முதனையாக இருந்துவந்த நிலையில், இந்நிறுவனங்களுக்கு போட்டியாக இருந்த ஊபர் ஈட்ஸ் நிறுவனமும் அண்மையில் ஜொமோட்டோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த நிலையில் அமேசான் நிறுவனம் இந்த நிறுவனங்களுக்கு போட்டியாகவும், புதிதாகவும் உணவு டெலிவரி சேவையில் களமிறங்கியுள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவில் மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, வைட்ஃபீல்ட், பெல்லந்தூர் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் சுமார் 100 உணவகங்களில் அமேசான் ஃபுட் சேவை தொடங்கப்படுகிறது. இதில் பாக்ஸ்8, சாய் பாய்ண்ட், ஃபாசோஸ், மேட் ஓவர் டோனட்ஸ் , ரேடிசன், மேரியாட் உள்ளிட்ட உணவகங்கள் அடங்கும். மேற்கண்ட 4 நான்கு இடங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு இந்த உணவு டெலிவரி சேவை இருக்கும் என்றும், இவர்கள், அமேசான் ஆப்பின் மூலமாகவே, உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அமேசான் இந்தியா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், “மற்ற அத்தியாவசியப் பொருட்களை அமேசான் டெலிவரி செய்வது போலவே, சமைத்த உணவுகளையும் டெலிவரி செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என அண்மைக்காலமாகவே சில வாடிக்கையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில் இந்த கொரோனா சூழலில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு உணவு டெலிவரி மிக முக்கியமானதாக இருக்கிறது. உள்ளூர் உணவகத் தொழில்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பது பற்றியும் நாங்கள் அறிவோம். எனவே பெங்களூருவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் மட்டும் அமேசான் ஃபுட் அறிமுகப்படுத்தப்படுகிறது. அமேசான் ஃபுட் நிறுவனத்தின் தூய்மை தரநிலைச் சான்றுகளை பூர்த்தி செய்யும் உள்ளூர் உணவகங்கள் மற்றும் கிளவுட் கிட்சன்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் அமேசான் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். தவிர, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி உயர்நிலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
முன்னதாக ஸ்விகி, ஜோமோட்டோ நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அமேசான் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தால் பல வேலைவாய்ப்புகள் உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.