‘தத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவனுக்கு’.. ‘லண்டன் தம்பதியால் நடந்த பயங்கரம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் காரணம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 18, 2019 01:17 PM
தத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவனை லண்டன் தம்பதி இன்ஸ்யூரன்ஸ் பணத்திற்காக திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லண்டனில் வசித்து வரும் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கவல் ரய்ஜடாவும், ஆர்த்தி திர்ரும் 2015ஆம் ஆண்டு குழந்தை ஒன்றை தத்தெடுக்க இந்தியா வந்துள்ளனர். அவர்கள் செய்தித்தாளில் அளித்த விளம்பரத்தை பார்த்து கோபால் செனாஜி என்ற 11 வயது சிறுவனின் குடும்பத்தினர் அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். பெற்றோரை இழந்த கோபால் செனாஜி தன்னுடைய மூத்த சகோதரியின் அரவணைப்பில் இருந்து வந்துள்ளார்.
இதன்காரணமாக தங்களுடன் வறுமையில் வளர்ந்து வந்த கோபால் செனாஜியை லண்டன் தம்பதிக்கு அவருடைய அக்கா தத்துக்கொடுத்துள்ளார். சிறுவனை முறையாக தத்தெடுத்த லண்டன் தம்பதி சில நாட்களிலேயே அவர்மீது 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு இன்ஸ்யூரன்ஸ் எடுத்துள்ளனர். ஆனால் அதன்பின் சில முன்னேற்பாடுகளை செய்துவிட்டு லண்டன் அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுவனை குஜராத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த கோபால் செனாஜி கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிலரால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதைத் தடுக்க வந்த அவருடைய உறவினர் ஒருவரும் இதில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்யூரன்ஸ் பணத்திற்காக லண்டன் தம்பதி திட்டமிட்டு ஆள் வைத்து சிறுவனைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணைக்காக லண்டன் தம்பதியை இந்தியாவிற்கு நாடு கடத்த இந்திய அரசு இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நீதிமன்ற விசாரணையில் அவர்கள் இந்தியா கொண்டு வரப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
