'காந்தி ஜி எப்படி தற்கொலை பண்ணிக்கிட்டார்னு தெரியுமா?'... சர்ச்சையைக் கிளப்பியுள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Oct 14, 2019 11:31 AM
குஜராத மாநிலத்தில் காந்திநகரில் இயங்கிவரும் சுஃபாலம் ஷாலா விகாஸ் சங்குல் கல்வி அமைப்பின் கீழ் அரசு மானியங்கள் பெறும் சுயநிதி பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் இப்பள்ளிகளுக்கு வைக்கப்பட்ட தேர்வுகளில், கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் இந்தியாவையே அதிர வைத்துள்ளன என்று சொல்லும் அளவுக்கு சர்ச்சைக்குரிய கேள்விகளாக இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ‘உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை உயர்வு குறித்தும், கள்ளச்சாராய விற்பனை குறித்தும் காவல்துறை மேலதிகாரிக்கு கடிதம் எழுதவும்’ என்ற டாஸ்க் , தேர்வில் கொடுக்கப்பட்டது.
மட்டுமன்றி, அடுத்த அதிர்வலையை உண்டாக்கிய கேள்வியாக, ‘காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?’ என்கிற கேள்வி கேட்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காந்தியின் இறப்பு குறித்து இந்தியாவே அறிந்ததுதான் என்றாலும், பள்ளித் தேர்வில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இதனால் கோபப்பட்ட குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வதேர், மேற்கண்ட சுவலாம் சஹாலா விகாஸ் சங்குல் அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கடந்த சனிக்கிழமை நடந்த இண்டர்னல் தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கும் மாநில கல்வித்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவை அந்த அமைப்பின் நிர்வாகத்தினர் சார்பில் தயாரிக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அமைப்பு மற்றும் பள்ளி நிர்வாகங்களின் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
