‘ஹாஸ்பிட்டலில் திடீரென பற்றிய தீ’... ‘பதறிய பெற்றோர்’... ‘பிறந்து சில மாதமே ஆன’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Oct 21, 2019 03:35 PM
தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில், பிறந்து 4 மாதமே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் எல்.பி. நகர் காவல்நிலையத்திற்கு எதிரே, தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று, கடந்த 9 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், 4-வது தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில், பிறந்து சில மாதமே ஆன குழந்தைகளுக்கான அறையில், 42 குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில், இந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அப்போது மருத்துவர்கள் யாரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மற்றும் செவிலியர்கள், உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் எதிரே உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் பிறந்து 4 மாதமே ஆன ஆண்குழந்தை ஒன்று, நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தது. இந்த குழந்தையை காப்பாற்ற உறவினர்கள் முயற்சித்த நிலையில், அவர்களது கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் 6 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்குபேட்டர் அறையில் இருந்த ஏசியில், ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தைகள் பிரிவில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக அங்கு இருந்தவர்கள் கூறியுள்ளனர்.