‘48 ஆயிரம் ஊழியர்களை’.. ‘அதிரடியாக பணிநீக்கம் செய்து’.. ‘சந்திரசேகர ராவ் உத்தரவு’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 07, 2019 03:18 PM

தெலுங்கானாவில் 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

Telangana CM KCR dismisses 48000 employees of TSRTC

போக்குவரத்து கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி தெலுங்கானா சாலை போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சனிக்கிழமைக்குள் பணிக்குத் திரும்புமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு கெடு விதித்திருந்தார்.

முதலமைச்சரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தெலுங்கானா போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 49 ஆயிரத்து 340 பேரில் 1200 பேர் வேலைக்குத் திரும்பியுள்ளனர். இதையடுத்து பணிக்குத் திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா போக்குவரத்து கழகம் 5 ஆயிரம் கோடி கடன் நெருக்கடியில் இருக்கும்போது வேலை நிறுத்தம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ள அவர், தசரா உள்ளிட்ட பண்டிகை காலகட்டத்தில் வேலை நிறுத்தம் செய்வது பெரும் குற்றம் எனவும் கூறியுள்ளார். 

போக்குவரத்து கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முற்றிலுமாக மறுத்துள்ள சந்திரசேகர ராவ், புதிதாக ஆட்கள் தேர்வு செய்யும் பணி விரைவில் நடைபெறும் எனக் கூறியுள்ளார். மேலும் புதிதாக பணியில் சேர்பவர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் சேர மாட்டோம் என உறுதியளித்த பின்னரே பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அரசு போக்குவரத்து கழகத்தை பாதியளவு தனியார்மயமாக்க தெலுங்கானா அரசு முடிவெடுத்துள்ள நிலையில், தற்போதையை பிரச்சனையை சமாளிக்க 2500 பேருந்துகளை தனியாரிடம் குத்தகைக்குக் கொடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : #TELANGANA #CM #CHANDRASEKHARRAO #TSRTC #STRIKE #DISMISS #EMPLOYEES