‘இந்தியர்கள் உள்பட 2 லட்சம் பேர்’... ‘அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை’... ‘கலங்கி நிற்கும் மக்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 29, 2020 07:39 PM

அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த இந்தியர்கள், மாணவர்கள் உள்பட வெளிநாட்டினர் சுமார் 2 லட்சம் பேர் வரும் ஜூன் மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

2,00,000 H-1B workers could lose legal status by June

அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள்  எச்-1பி விசாவில்  பணியாற்றி வருகின்றனர். எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும். அதன் பின்பு தாய்நாடு திரும்ப வேண்டும் என்பது அங்கு கட்டாய சட்டமாக உள்ளது. அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில், இந்தியர்கள் உள்பட சுமார் 2 லட்சம் பேர் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அமெரிக்காவில் சுழன்று அடிக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலரும் வேலை இழந்துள்ளனர்.

அத்துடன் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு அளித்து வீட்டிலேயே இருக்க உத்தரவிட்டுள்ளன.  எச்1பி விசா விதிப்படி  இவ்வாறு ஊதியம் இல்லாமல் இருப்பவரும் பணி இல்லாதவராகவே கருதப்படுவார்கள். ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மாற்று வேலையைத் தேட வழியில்லை என்பதுடன், அலுவலகங்கள் எல்லாம் மூடப்பட்டிருப்பதால்,  60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காகவும் அனுமதி கோர முடியாது என்ற நிலை நிலவி வருகிறது. ஏற்கனவே பலர் 30 முதல் 40 நாட்கள் வரையிலான காலத்திற்கு வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் இருக்கின்றனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொருளாதாரம் மீண்டும் முழுவீச்சில் செயல்படும்போது வேலையிழந்த அமெரிக்கர்களின் பணிகளை பாதுகாப்பதே முக்கிய முன்னுரிமை என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில் எச்-1பி விசாவில் இருக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள்  தாய்நாட்டிற்குத் திரும்பும்  நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஆனால சர்வதேச விமான சேவைகள் இல்லாததால் அவர்கள் எப்படி வருவார்கள் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

விசா காலாவதி ஆகும் நிலையில் சிறைக்குச் செல்ல நேரிடலாம்.  அப்படி இல்லை எனில் இவர்களை அமெரிக்க அரசு முகாம்களில் அடைத்து வைக்கவும் வாய்ப்புண்டு. இதனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய ஊழியர்கள் அமெரிக்க அரசுக்கு புது கோரிக்கைகள் வைத்துள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 60 நாட்கள் கெடுவை 180 நாட்களாக நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்து, கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர்.