'2 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி...' 'திகைத்து நிற்கும் வல்லரசு நாடுகள்...' '21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித உயிரிழப்பு...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 26, 2020 12:28 AM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

The death toll from coronavirus has exceeded 2 lakhs

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏதோ ஒரு வைரஸ் சீனாவில் தோன்றி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு செய்தியாக மட்டுமே இருந்தது.

நவீன அறிவியல் வளர்ச்சியால் தொற்று நோய்களை எல்லாம் உலகம் எளிதாக கடந்து சென்று விடும் என பொதுமக்கள் நம்பினர். சீனாவும் நோய் பரவலை இரும்புக் கரத்துடன் அடக்கி ஒடுக்கியது. கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர் என சீனா உலகிற்கு தெரிவித்தது.

ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்தவைதான் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. வைரஸ் தொற்று தொடங்கி வெறும் 2 மாதத்தில் உலக நாடுகள் அனைத்திலும் இந்த வைரஸ் நுழைந்து விட்டது. கிட்டத்தட்ட 210 நாடுகளை இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளதாக உலக சுகாதாரநிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தனது உண்மையான கோர முகத்தை உலகத்திற்கு காட்டியுள்ளது என்றால் அது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தான். அங்கு கொத்து கொத்தாக மக்கள் மடிய ஆரம்பித்தனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து விழுந்தனர். வைரஸ் பரவும் வேகத்தை பார்த்து விஞ்ஞானிகளே அதிர்ந்து போயுள்ளனர். உலகம் உண்மையில் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறது என்பதை 2 மாதங்களில் உணர்ந்து விட்டனர்.

இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு என்று பார்த்தால் முதலிடத்தில் அமெரிக்காவே உள்ளது. அங்கு இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி திணறி வருகிறது.

இந்நிலையில், வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 2 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்று நோயால் உயிரிழந்து விட்டனர் என்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

* உலகளவில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 93 ஆயிரத்து 260 பேர் ஆவர். இதில் 8 லட்சத்து 25 ஆயிரத்து 075 பேர் குணமடைந்துள்ளனர்.

* கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துவிட்டது. இப்போதைய நேரத்தில் 2 லட்சத்து 1,671 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

* அமெரிக்காவில் மட்டும் 9 லட்சத்து 45 ஆயிரத்து 833 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 53 ஆயிரத்து 266 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1073 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 26 ஆயிரத்து 384 பேரும், ஸ்பெயினில் 22 ஆயிரத்து 902 பேரும் உயிரிழந்துள்ளனர். ஃபிரான்சில் 22 ஆயிரத்து 614 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் 20 ஆயிரத்து 319 பேர் உயிரிழந்துள்ளனர்.

* கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 1429 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 57 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 780 ஆக உயர்ந்துள்ளது.