‘ஐசிஎம்ஆர் வைத்த செக்’... ‘செம டென்ஷனில்’... 'இந்தியாவை குறை கூறும் சீனா’!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவில் தயாரிக்கப்பட்டு, அனுப்பப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் சரியில்லை, அதனால் உங்கள் ஆர்டரை கேன்சல் செய்கிறோம் என்று இந்தியா கூறியதற்கு, சீனா கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிவதற்காக, சீனாவைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேபிட் பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு கொள்முதல் செய்தது. ஆனால், இந்த ரேபிட் பரிசோதனைக் கருவிகளின் முடிவுகள் முரண்பட்டு (தவறாக) வருவதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த நிறுவனங்களிடம் வாங்கிய கருவிகளை பயன்படுத்துவதை மாநிலங்கள் நிறுத்த வேண்டும்.
அவற்றை சீனாவுக்கு திருப்பி அனுப்ப வசதியாக, எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று இந்திய அரசின் ஐசிஎம்ஆர் கேட்டுக்கொண்டது. பின்னர் இந்த நிறுவனங்களிடம் ஆர்டர் செய்யப்பட்ட கருவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அதனை பயன்படுத்தப்போவதில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து சீன தூதரக செய்தித்தொடர்பாளர் ஜி ரோங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சீனாவிடம் இருந்து பெற்ற அதிவிரைவு பரிசோதனை கருவிகளை பயன்படுத்தவேண்டாமென இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது வருத்தமளிக்கிறது.
இதற்கு ஏதுவான முடிவு இந்திய அரசால் எடுக்கப்படும் என்று நம்புகிறோம். சீனா, தான் ஏற்றுமதி செய்யும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் தரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டுள்ளது. அந்த கருவிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று, அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப, அதை குறிப்பிட்ட நபர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதன் துல்லியத்தில் மாறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால் அதனை சரியாக பயன்படுத்த தெரியாமல், மொத்த சீன பொருட்களும் தரமற்றது என்று முத்திரை குத்துவது, முன்கூட்டியே பொருட்கள் குறித்து தவறான முடிவுக்கு வருவது நியாயமற்றது, பொறுப்பற்றது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த ரேபிட் டெஸ்ட் கிட் சரியில்லை என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் கூறி வந்தநிலையில், இந்தியாவும் தற்போது கூறி உள்ளதால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது.