'உலக' நாடுகள் 'உறைந்து' நிற்கும் வேளையில்... 'இந்தியாவில்' மட்டும் 'இது' எப்படி சாத்தியம்?... 'குழப்பத்தில்' நிபுணர்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 25, 2020 01:41 AM

கொரோனாவால் சில நாடுகளில் இறப்பு விகிதம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் அதற்கு நேர்மாறாக நடந்து வருவது நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Coronavirus Indias Falling Mortality Rate Baffles Experts

சீனாவின் வுஹான் நகரில் முதல்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பெரும்பாலான உலக நாடுகளையும் புரட்டிப் போட்டு வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கும் வேளையில், தற்போதைய நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை  27,36,188 ஆக உள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் சுமார்  1,16,221 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதையடுத்து 2வது இடத்திலுள்ள இத்தாலியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 718 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் நிறைவடையும் நிலையில், இந்தியாவின் சில பகுதிகளில் உயிரிழப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களில்  சில நாடுகளில் உயிரிழப்பு விகிதம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் அதற்கு நேர்மாறாக உயிரிழப்பு விகிதமும், பாதிப்பு விகிதமும் குறைந்துள்ளது.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் உயிரிழப்பு விகிதம் மத்திய மும்பையில் சுமார் 21 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், அகமதாபாத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்புகள் 67 சதவீதம்  குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது இந்தியாவின் உயிரிழப்பு விகிதங்கள் மற்ற நாடுகளில் காணப்படுவதற்கு மாறாக உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் நெதர்லாந்தில் இயல்பை விட சுமார் 2,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் மார்ச் மாதத்தில் இறுதிச் சடங்குகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் குறைந்த உயிரிழப்பு விகிதம் குறைவான சாலை மற்றும் ரயில் விபத்துகளால் இருக்கலாம் என இந்திய மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் தகன ஊழியர்கள் ஆகியோர் சந்தேகிக்கின்றனர். 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்தது 15 சதவீதம் குறையும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக இயக்குனர் பரேஷ் குமார் கோயல் தெரிவித்துள்ளார். அத்துடன் பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசியுள்ள கங்கை ஆற்றின் கரையில் செய்யப்படும் தகனப் பணிகளுக்கான பொறுப்பாளர் நீரஜ் குமார், "வழக்கமாக நாங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது விபத்தில் உயிரிழந்தவர்கள் 10 பேருடைய உடல்களையும், கொலை வழக்குகள் தொடர்பான உடல்கள் பலவற்றையும் பெறுவோம். ஆனால் ஊரடங்கிற்கு பின்னர் நாங்கள் இயற்கையாக உயிரிழந்தவர்களுடைய உடல்களை மட்டுமே பெறுகிறோம். முன்னர் ஒரு நாளைக்கு 30 உடல்கள் தகனம் செய்யப்பட்ட இந்த இடத்தில்  மார்ச் 22 முதல் ஒரு மாதத்தில் 43 பேர் மட்டுமே தகனம் செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.