‘அவர் ஆணா பெண்ணானு தெரியல’.. என கூறி அடுத்த சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் சம்பத்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 28, 2019 05:21 PM
பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்துக்காக பேசிய நாஞ்சில் சம்பத், கிரண்பேடியின் பாலினத்தைப் பற்றிய அவதூறு கருத்தினை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பேசிய நாஞ்சில் சம்பத்,‘கட்சி அரசியலில் இருந்து விலகி, இலக்கிய வெளியில் என் பயணம் தொடரும் என்று அறிவித்து, ஓராண்டு முடிந்துவிட்ட சூழலில், இப்போது இந்தியாவில் ஒரு பொதுத் தேர்தலாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பாசிஸ்ட சக்திகள், ஒரு கலாச்சார பாசிஸ்டத்தை கட்டவிழ்க்கத் துடிக்கின்ற இந்த காலக்கட்டத்தில் பெரியார், அண்ணா ஆகியோரின் லட்சியங்களை வென்றெடுப்பதற்கு 32 ஆண்டுகளாக கடமையாற்றிய நான், இந்த தேர்தலில் பாஜகவுக்கு முடிவு கட்டும் யுத்தத்தில் என்னுடைய குரல் ஒலிக்காமல் இருந்தால் நான் உயிரோடு இருப்பதற்கு அர்த்தமில்லை என்பதற்காக வைத்திலிங்கத்துக்காக பேச வந்துள்ளேன்’ என கூறினார்.
பின்னர், ‘இந்தியாவில் 21 மாநிலங்களில் பாஜக கவர்னர். இங்கே ஒரு அம்மா நீரவ் மோடி. ஆணா என்றும் தெரியாது. பெண்ணா என்றும் தெரியாது (அருகில் இருப்பவர் கிரண் பேடி என சொல்லிக்கொடுக்கிறார்.. அதை காதில் வாங்கிக் கொண்ட நாஞ்சில் சம்பத் மீண்டும் திருத்திக்கொண்டு) கிரண்பேடி. என்ன அட்டகாசம்.? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் டெல்லியில் இருந்துவந்து முதல்வருக்கு இடையூறு கொடுப்பதா? தமிழ்நாட்டிலோ புரோஹித். இதற்கு பெயர்தான் ஜனநாயகமா?’ என கேட்டுள்ளார்.
இதில் ஒரு மாநில ஆளுநரான கிரண்பேடியை ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை என்று நாஞ்சில் சம்பத் பேசியுள்ளது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
