40 தொகுதிக்கு 810 பேர் வேட்புமனு தாக்கல்! இன்றுடன் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | Mar 26, 2019 08:55 PM
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக வருகின்ற ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களிலும் நடைப்பெறயிருக்கின்றது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், மேலும், காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இது தவிர, புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை மற்றும் காலியாகவுள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் அதேநாளில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்காக கடந்த 19 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில், சுயேட்சை வேட்பாளர்கள், சில முக்கிய வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து நேற்று பிரதான கட்சிகளை சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்களான கனிமொழி, தமிழிசை சௌந்திரராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், ஹெச். ராஜா, கார்த்தி சிதம்பரம், ஆ. ராசா உள்ளிட்ட பலர் தங்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தகவல் வெளியிட்ட தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தலுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 810 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 300 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் வேட்புமனுக்களை பரிசீலிக்கும் பணி தொடங்கவுள்ளது. வரும் 29 ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற்று கொள்ளலாம் என்றும் பின்னர் அன்று மாலை 5 மணியளவில் 39 மக்களவைத் தொகுதிக்கும் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்குமான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.