’17 வருடத்துக்கு பின் பள்ளிக்கு மின்சாரம்.. ‘தேர்தலே காரணம்’.. நன்றி சொல்லும் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 24, 2019 12:19 PM

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோவையில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்று வரம் பெற்றது போல், இந்தத் தேர்தலை முன்னிட்டு பெரும் நன்மையினை அடைந்துள்ளது.

due to lok savha elections, this school gets electricity after 17 yrs

கோவையின் தடாகம் அருகே உள்ள பழங்குடி இனத்தவர்களுக்கான இந்த பள்ளி துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால், கோவை பெரியநாயக்கம் பாளையம் ஒன்றியத்தில் ஆணைக்கட்டியில் உள்ளது. இங்கிருக்கும் சுற்றத்தின் பழங்குடி இனத்தவர்களுள் இருந்து சுமார் 47 மாணவர்கள் இந்த நடுநிலைப் பள்ளிக்கு தினந்தோறும் கல்வி பயில வருவதுண்டு.

குறிப்பாக தடாகம் வனப்பகுதிக்குள் உள்ள செம்புக்கரை, தூமனூர், காட்டுசாலை ஊர்களில் இருந்து வரும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்த பள்ளிதான் கல்விக்கான ஒரே மையமாக இருந்து வருகிறது. இந்த 3 கிராமங்களிலும் சேர்த்து சுமார் 150 குடும்பங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் இந்த ஊர்களில் மின்சார வசதியே கடந்த 2016-ஆம் ஆண்டுதான் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இங்குள்ள பள்ளியில் மின்சார வசதியே ஏற்படுத்தப்படவில்லை.

2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த பள்ளிதான் வாக்குச் சாவடியாக இருந்த போதிலும் அந்த சமயம் ஜெனரேட்டர் வசதி கொண்டு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் பிறகு உண்டாக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரமும் முறையாக செயல்படவில்லை. 2002-ஆம் ஆண்டு கட்டியமைக்கப்பட்ட இந்த பள்ளியில் சுமார் 17 வருடங்கள் கழித்து தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டே முழுமையான தங்குதடையற்ற மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு,  மின்சார வசதிகள் இல்லாத பல கிராமப்புற மாணவர்கள் பள்ளியிலேயே படிப்பதற்காக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆக, இந்த 17 ஆண்டு கால முக்கிய பிரச்சனையாக இருந்த ஒன்றைப் போக்க இந்த நாடாளுமன்றத் தேர்தல் எப்படியோ உதவியதாக அம்மக்கள் கருதுகின்றனர்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #COIMBATORE #ELECTRICITY #TRIBLES #SCHOOL