தேர்தல் யுத்தம்: இருபெரும் கட்சிகளின் வியூகம்.. தென் சென்னையில் யாருக்கு வெற்றி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 27, 2019 04:05 PM
திமுகவின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த, அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா இருவரின் மறைவுக்குப் பின் தமிழ்நாடு சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தலாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் வேட்பாளர்கள், சின்னம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை அறிவித்து பல கட்சிகள் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். எனினும் வேட்பு மனுத்தாக்கலுக்கான கால அவகாசங்களும் முடிந்தன.

இதில் சென்னையில் முக்கியமான தொகுதி தென் சென்னை. 1977 மற்றும் 1980-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியிலிருந்து போட்டியிட்ட ஆர்.வெங்கட்ராமன்(1910-2009) வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பணியாற்றியதுடன் பின்னர் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் பணியாற்றினார் என்பது இந்த தொகுதியின் சிறப்புமிக்க அடையாளமாக மாறியது.
ஆனால் 2008-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி தென்சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டன. இந்த தொகுதியில்தான் தற்போதைய மக்களவைத் தேர்தலில், அஇஅதிமுக சார்பில், அக்கட்சியின் வேட்பாளராக டாக்டர் ஜெயவர்தனும், திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தொகுதியில் அஇஅதிமுகவிற்கு எந்த அளவுக்கு அறிமுகமும் செல்வாக்கும் இருக்கின்றன என்பவற்றை கடந்த கால தேர்தல் வரலாறுகள் நினைவூட்டுகின்றன. கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சி. ராஜேந்திரன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதாவது ஒட்டு மொத்த வாக்குகளில் 42.38 விழுக்காடு வாக்கினை அஇஅதிமுக வேட்பாளர் பெற்றார். இதேபோல் 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டாக்டர் ஜெயவர்தன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 4,34,540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.34 விழுக்காடாகும்.
இந்நிலையில் தற்போது இதே தொகுதியில் செல்வாக்கு மிக்கவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயவர்தன் அஇஅதிமுகவின் சார்பில் மீண்டும் உற்சாகத்துடன் களம் காண்கிறார். தனக்கு பரீச்சயமான அந்த தொகுதி மக்களிடையே ஆதரவைப் பெற்றவராகவும் ஜெயவர்தனன் இருப்பதைக் காண முடிகிறது. ஆனால் திமுக முன்னிறுத்தியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் புதிதாக களமிறங்கும் ஒரு வேட்பாளராகவும், தென் சென்னையில் அறிமுகம் தேவைப்படும் ஒரு வேட்பாளராகவும் இருக்கிறார்.
என்றாலும் கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன் (எ) சுமதி தங்கபாண்டியன், தமிழக அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் சகோதரி என்கிற முறையில் அரசியலுக்கு தூரமானவரல்ல என்பது ஊர்ஜிதமாகிறது. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம் தலைமுறையான உதயநிதி ஸ்டாலின் நேரடியாகக் களமிறங்கி தமிழச்சி தங்கபாண்டியனுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆகையால், மாற்றம் வேண்டும் என எண்ணி தென்சென்னை மக்கள் தங்கள் தொகுதிக்கு புதிய தலைமையைத் தேர்ந்தெடுப்பார்களா? அல்லது பரீச்சயமான தலைமையை மீண்டும் தேர்ந்தெடுப்பார்களா என்பன போன்ற பல கேள்விகளை இந்த மக்களவைத் தேர்தல் யுத்தம் உருவாக்கியுள்ளது. விடைகளை பொருத்திருந்துதான் பார்க்க முடியும்.
