‘மாணவர்களுக்கு லேப்டாப்.. தமிழ்நாட்டுக்கு செயற்கைக்கோள்’.. அனல் பறக்கும் அமமுக தேர்தல் அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 22, 2019 04:00 PM

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய, மாநில கட்சிகள் பலவும் தங்கள் கட்சிகளுக்கான சின்னங்களைப் பெற்று வருவதோடு, தங்கள் கட்சிக்கான வேட்பாளர் பட்டியல்களையும் அறிவித்து வருகின்றன.

Features of AMMK TTV Dhinakarans manifest for loksabhaelections2019

டிடிவி தினகரன் அதிமுக-வுடன் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கினார். சசிலாவின் கீழ் இந்த கட்சியை நடத்திவரும் டிடிவி தினகரனே, இந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக விளங்குகிறார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கவிருப்பதற்கான வேட்பாளர் பட்டியல்களை 2 கட்டங்களாக வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்கவுள்ளதாகவும் அறிவித்த டிடிவி தினகரன், அதற்கான வேட்பாளர் பட்டியலையும் தன் கட்சி சார்பில் வெளியிட்டார். அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த பல எம்.எல்.ஏக்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  மேலும் அமமுக எந்த சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் என்பது வரும் 25-ஆம் தேதி தெரியும் என்று குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன் கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு 50ஆயிரம் முதல் 2 லட்சம் வரை தொழில் கடன் வழங்குவது தொடங்கி பல திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களாக இருக்கும் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, 60 வயதைத் தாண்டியவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.4000, பொறியியல் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி, தமிழகத்திற்கென தனி செயற்கைக் கோள்கள், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான அனுமதி ரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி, 6-ஆம் வகுப்பு முதல் முதுகலை வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின், தமிழ் ஆட்சி மொழியாதல்,  எழுவர் விடுதலை, மாணவர்கள் நல ஆணையம் மற்றும் காவல்துறையில் உளவியல் நிபுணர்கள் கொண்ட  தனிக்குழு மற்றும் பல முக்கியமான சிறப்பம்சங்கள் அமமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.