‘மய்யத்துடன் கூட்டணி இல்லை.. தென் சென்னையில் போட்டி’: பவர் ஸ்டாரின் பிரத்யேக பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 27, 2019 06:00 PM
நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய குடியரசு கட்சி அ பிரிவின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தென் சென்னையில் நடிகர் பவர் ஸ்டார் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி பிஹைண்ட்வுட்ஸ் இணையதள சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள பவர் ஸ்டார் சீனிவாசன், பவர் ஸ்டார் என்றாலே மக்களின் ஓட்டு விழும் என்று பேசத் தொடங்கியவர், தான் திடீரென வரவில்லை என்றும், மகாராஷ்டிராவில் பிறந்த இக்கட்சியில், தான் கடந்த ஓராண்டுக்கு முன்பாக சேர்ந்ததாகவும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டதோடு, தற்போது அக்கட்சியின் சார்பில் தென் சென்னையில் போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது கட்சியின் முக்கிய செயல்பாடாக பெண்களுக்கான உரிமைகளை முன்வைப்பதாகவும், அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கவுள்ளதாகவும் கூறியவர், எம்ஜிஆர் உள்ளிட்ட பலரும் சகோதரிகள், தாய்மார்கள் என பெண்களை மையப்படுத்திதான் முதல்வரானதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் போட்டி நிறைந்த தென் சென்னையில் அனுபவம் வாய்ந்தவர்கள், புதியவர்கள் என யார் நின்றாலும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதோடு, தன்னுடைய மொத்த நம்பிக்கையும் மக்கள் மீதும், கடவுள் மீதும்தான் இருப்பதால் அன்பால் ஜெயிக்க நிறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்தத் தொகுதியில் தொடர்ந்து செல்வாக்கு பெற்றிருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஜெயவர்தன் உள்ளிட்டோர் போட்டியிடும் நிலையில் மக்கள் புதுமையை விரும்புவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வெற்றி பெற்றால் மக்களுக்காக வாழ்ந்து அவர்களுக்கு சேர வேண்டியவற்றை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத்தர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
உண்மையில், இந்திய குடியரசு கட்சி என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இந்த கட்சிப் பிரிவுகளுள், முதன்மையானதுதான் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் அ பிரிவு. இந்த கட்சிதான் (அ பிரிவு) தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் சூசை முன்னதாக அறிவித்திருந்தார். இந்த கட்சியின் சார்பாகத்தான் பவர் ஸ்டார் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் இருக்கும் கட்சிக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்துள்ள கட்சிக்கும் தொடர்பில்லை என்பதையும் அவர் இந்த பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.