‘ஜெயிலுக்கு போகணும்’ .. 104 வயது பாட்டியின் விநோத ஆசைக்கு காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Mar 26, 2019 06:52 PM
தென்மேற்கு இங்கிலாந்து பகுதியில் உள்ள பிரிஸ்டல் என்கிற நகரத்தில் உள்ள பராமரிப்பு இல்லமொன்றில் பல முதியவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உறவுகள் முதலான பல உன்னதமானவற்றை இழந்து, புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து முதியோர் இல்லத்தில் வாழத் தொடங்குபவர்களுக்கு ஆதரவு தரும் இந்த இல்லம், அண்மையில் தங்கள் இல்லத்தில் இருக்கும் அனைத்து முதியவர்களின் ஆசையையும் முடிந்த அளவுக்கு நிறைவேற்றி அவர்களின் இறுதிகாலத்தை மகிழ்ச்சியான காலமாக அவர்களுக்கு மாற்றித்தர வேண்டும் என்று முடிவு செய்தது.
அதற்கென அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்களின் சின்னச்சின்ன ஆசைகளை கேட்டு கேட்டு நிறைவேற்றி வந்தது. அவ்வகையில் இந்த முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 104 வயதான பாட்டியான அன்னி புரோக்கன் தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்றச் சொல்லி கேட்டிருக்கிறார்.
அனைவரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய அந்த பாட்டியின் ஆசை தன்னை போலீஸ் கைது செய்ய வேண்டும் என்பதுதானாம். ஆம், அத்தனை வருடங்களாக சட்ட ஒழுங்குமுறைகளை மதித்து விதிகளின்படி நெறிமுறைகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து வந்ததால், தான் ஒருமுறை கூட சிறை, காவல்துறை உள்ளிட்டவற்றை பார்க்கவில்லை என்றும், அதனால் ஒரே ஒரு முறையாவது காவல்துறை தன்னை கைது செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்ட பாட்டியின் ஆசையை அந்த பராமரிப்பு இல்லம் நிறைவேற்றி வைத்துள்ளது.
அவரது ஆசைப்படி காவல்துறையினர் அவரை நேரில் வந்து கையில் விலங்கிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் அழைத்து வந்துள்ளனர். இந்த அனுபவம் தனக்கு வித்யாசமாக இருந்ததாக கூறிய அன்னி புரோக்கனுக்கு ஆரம்பநிலை மனச்சிதைவு இருந்ததால், அவரை மனம் கோணாமல் இந்த இல்லம் பார்த்துவருவது குறிப்பிடத்தக்கது.