‘30 ஆண்டுக்கு முன் கேட்ட அதே பெயர்’.. விமானியை நெகிழவைத்த மழலைப்பள்ளி ஆசிரியை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Mar 26, 2019 06:14 PM
தன்னிடம் எத்தனையோ மாணவர்கள் படித்திருப்பார்கள், அவர்களை எல்லாம் காலங்கள் பல ஓடிய பின்பு மறந்து விடும் ஆசிரியர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் இங்கு மழலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர், முப்பது ஆண்டுகள் ஆன பின்பும், தன்னுடைய மாணவரின் பெயரைக் கேட்டவுடன், ஞாபகப்படுத்திய நெகிழ்ச்சியான தருணம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

மழலையர் பள்ளி ஆசிரியரான சுதா சத்யன் என்பவர், அமெரிக்காவுக்குச் செல்ல நேற்று டெல்லியிலிருந்து சிகாகோ செல்லும் விமானத்தில் புறப்பட்டார். விமானம் புறப்படத் தயாரானதும் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகன் பாசின் என்ற பெயரைக் கேட்டவுடன் ஆசிரியர் சுதாவுக்கு பழைய நினைவுகள் தன் கண்முன் நிழலாடின.
30 ஆண்டுகள் முன்பு ஆசிரியர் சுதா ஒரு மழலையர் பள்ளியில் வேலை பார்த்தார். அப்போது ரோகன் பாசின் எனும் சிறுவன் ஆசிரியர் சுதா வகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்டான். அந்தச் சிறுவனைப் பார்த்து 'உன் பெயர்' என்ன என்று ஆசிரியர் சுதா கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் 'என் பெயர் `கேப்டன் ரோகன் பாசின்' ' என்றுக் கூறினான். சுதாவுக்கு அந்தச் சிறுவனை மிகவும் பிடித்துப் போனது.
பல ஆண்டுகள் சென்றப் பின்னர், தற்போது தான் செல்லும் விமானத்தில் `கேப்டன் ரோகன் பாசின்' எனும் பெயர் அறிவிப்பைக் கேட்டதும் ஆசிரியர் சுதாவுக்கு 'தன் பழைய பள்ளி மாணவனாகத்தான் இருக்கும்; அவன் கனவு கண்டபடியே விமானியாகிவிட்டான்' என்று உறுதியாக நம்பினார். விமானப் பணிப்பெண்ணை அழைத்த சுதா, 'விமானி ரோகனை நான் சந்திக்க வேண்டும்' என்று கூறினார். விமானப் பணிப்பெண்ணும் கேப்டன் ரோகனை ஆசிரியரிடம் அழைத்து வந்தார்.
30 வருடங்களுக்குப் பிறகு தனது ஆசியரைப் பார்த்த அந்த மாணவனுக்கு இன்ப அதிர்ச்சி. விமானத்திலேயே இருவரும் கட்டித் தழுவி ஒருவொருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். விமானி ஆக வேண்டும் என்று சிறு வயது முதலே கனவுக் கண்ட ரோகன் கடைசியில் விமானியாகிவிட்டார் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியை அவரால் மட்டுப்படுத்த முடியவில்லை. இதனை பார்த்துக்கொண்டிருந்த சக பயணிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.
இந்த நிகழ்வைப் பற்றி அறிந்த மாணவனும், கேப்டனுமான ரோகனின் அம்மா, ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ரோகன் 3 வயது சிறுவனாக இருந்தபோது, மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
#WarmsTheCocklesOfMyHeart....
— Nivedita Bhasin (@nivedita_bhasin) March 24, 2019
During Playschool admission, the teacher asked my son his name.
Nonchalantly he answered, "Capt Rohan Bhasin".
And he was just 3.
And today, the same teacher was enroute to Chicago.
And he was indeed the Captain. 🤗👨✈️#StudentTeacherReunion❤️ pic.twitter.com/nGAqZSKUnF
