டீன் ஏஜில் கலைந்து போன கனவு... 10 மணி நேர போராட்டம்... இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை பெற்று... இளம் தம்பதிக்கு கிடைத்த மிராக்கிள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jan 10, 2020 10:42 PM

தான் கனவில் கூட நினைக்காத விஷயத்தை தற்போது கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றெடுத்த மகிழ்ச்சியில் இளம் பெண் ஒருவர் திளைத்துள்ளார்.

US Philadelphia woman with transplanted uterus gives birth

அமெரிக்காவைச் சேர்ந்தவர் 33 வயது இளம் பெண்ணான ஜெனிஃபர் கோப்ரெட்ச். இவருக்கு தனது 17-வது வயதில்தான் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற விஷயம் தெரிய வந்துள்ளது. ஏனெனில் இவர், Mayer-Rokitansky-Kuster-Hauser (MRKH) என்ற குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இது பெண்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் முக்கியக் குறைபாடு. அதாவது கருப்பப்பை இல்லாமல் பிறப்பது அல்லது கருப்பப்பை வளர்ச்சியடையாமல் இருப்பது. 500 பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் குறைபாடுடையவர்கள் தங்களது கர்ப்பப்பையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.

இதனை தனது டீன் ஏஜில் அறிந்த ஜெனிஃபர் கோப்ரெட்ச், ‘அன்பான தாயாக வேண்டும் என்ற தனது கனவு கலைந்ததை மிகவும் கடினமாக உணர்ந்துள்ளார். எல்லாப் பெண்களையும் போல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், கருவறையில் குழந்தை உதைப்பதை மகிழ்ச்சியாக அனுபவிப்பது உள்ளிட்ட எந்த சந்தோஷமும் கிடைக்க தனக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் தனது கனவுகள் மறைந்துவிட்டதாக கவலையடைந்துள்ளார். அதன்பிறகு, ஜெனிஃபர், ட்ரூ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவரிடம் சென்றுள்ளனர்.

அப்போதுதான் இவர்களுக்குக் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை பற்றித் தெரியவந்துள்ளது. அதன்படி 2018-ம் ஆண்டில், ஜெனிஃபர் 10 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர், இறந்த கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட கர்ப்பப்பை அவருக்குப் பொருத்தப்பட்டது. இந்தச் சிகிச்சை நடந்த சில வாரங்களில் ஜெனிஃபர் கருவுற்றார். அவருக்கு அழகான ஆண் குழந்தை, கடந்த நவம்பர் மாதம் சிசேரியன் மூலம் பிறந்தது. தற்போது மகிழ்ச்சியில் இந்த தம்பதி திளைத்துள்ளனர். இது பற்றி ஜெனிஃபர் கூறும்போது, ‘நான் உண்மையான பிரகாசத்தை உணர்ந்தேன், கருவுற்றிருந்தபோது குழந்தையின் உதையை உணர்ந்தேன்.

அவை என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்’ என்றார். ஜெனிஃபர்-ட்ரூ தம்பதியினர் தங்கள் ஆண் குழந்தைக்கு `பெஞ்சமின்' என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வருகின்றனர். இந்தக் குழந்தை பிறந்த பிறகு, ஜெனிஃபருக்கு பொருத்தப்பட்ட கர்ப்பப்பை மருத்துவரீதியான காரணங்களால் மருத்துவர்களால் நீக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் இறந்த கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருப்பப்பை மூலம் உயிருடன் குழந்தை பெற்ற 2-வது தாய் என்ற பெருமையை ஜெனிஃபர் பெற்றுள்ளார்.

Tags : #UTRES #WOMAN #UNITED #STATES