‘பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு கூப்ட்டேன்’!.. ‘கண்ணுல பசைய தடவி..!’.. சென்னை கற்பூர வியாபாரி கொலையில் இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jan 06, 2020 06:28 PM
சென்னையில் தோழியின் தந்தையை கொலை செய்த வழக்கில் கைதான இளம்பெண்ணின் வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே உள்ள துறைமுகம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அம்மன் சேகர் (59). இவர் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 23 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அப்பெண்ணை ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் கொலை செய்ததற்காக காரணம் குறித்து அப்பெண் தெரிவித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதில், அம்மன் சேகரின் மகளுடன் நான் கல்லூரியில் ஒன்றாக படித்தேன். நாங்கள் இருவரும் தோழிகளாக பழகினோம். இருவரும் ஒரே பகுதி என்பதால் அம்மன் சேகரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது தோழியின் அப்பா என்ற முறையில் அவரிடம் பழகினேன். அவரை அப்பா என்றுதான் அழைப்பேன். நான் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்தார். அதனால் அவர் மீது அன்பும் மரியாதையும் ஏற்பட்டது. பைக்கில் சில இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவரும் செல்ஃபி எடுத்துள்ளோம்.
எங்கள் இருவரின் பழக்கத்தை வீட்டில் கண்டித்தனர். நாங்கள் இருவரும் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்தோம். கற்பூர வியாபாரத்துக்கு செல்லும்போது என்னையும் பைக்கில் அழைத்து செல்வார். அப்போது ஹோட்டலில் நான் விரும்பும் உணவை வாங்கிக் கொடுப்பார். இந்த சமயத்தில் எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். அதை அறிந்ததும் அம்மன் சேகர் என்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்வதாக கூறினார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை.
அதனால் என் திருமணத்தை தடுக்க நாங்கள் இருவரும் எடுத்தப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டினார். இந்த சமயத்தில் அம்மன் சேகருக்கு பிறந்தநாள் வந்தது. அதற்கு கிஃப்ட் கொடுப்பதாக கூறி கடந்த 23ம் தேதி இரவு அழைத்தேன். அதை நம்பி வந்த அம்மன் சேகரிடம் கண்களை மூடுமாறு கூறினேன். பின்னர் அவர் கண்ணிலும், வாயிலும் பசையை தடவினேன். எரிச்சலால் அவர் துடித்தபோது, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது தான் மட்டும்தான் கொலை செய்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.