ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி பார்த்த வேலையால்... கோயிலுக்கு சென்ற கணவருக்கு... ஓடும் ரயிலில் நேர்ந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 02, 2020 12:40 AM

சென்னை அருகே ஓடும் ரயிலில் இருந்து கணவரை கீழே தள்ளி ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

wife try to kill her husband with help of lover over affair

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன் (30).  இவர் கடந்த 29-ம் தேதி சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயிலில் இருந்து அரக்கோணம் அருகே தவறி விழுந்து விட்டதாக அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ‘கடந்த 29-ம் தேதி மதியம், திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் ஆவடி அருகே ஏறினேன்.

அரக்கோணத்திற்கும், திருத்தணிக்கும் இடையே காட்டு ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, கைக்குட்டையால் முகத்தை மூடியிருந்த 3 பேர், திடீரென என்னை கொலை செய்வதற்காக ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்தேன். மாலை நினைவு திரும்பியதும் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். எனக்கும், எனது மனைவி அஸ்வினிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தனது மனைவி, கூலிப்படையை வைத்து என்னை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது’ என்று கூறினார்.

பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, ராஜேந்திரனின் மனைவி அஸ்வினியை பிடித்து விசாரித்தப்போது, அவருக்கும், அவரது நண்பரான சென்னை செம்பியத்தை சேர்ந்த அனுராக் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட ராஜேந்திரனுக்கும், மனைவி அஸ்வினிக்கும் கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அனுராக்குடன் செல்ஃபோனில் தினமும் அஸ்வினி பேசி வந்துள்ளார். இந்நிலையில் தான் மனைவி திருந்தி வாழ வேண்டும் என்று திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வதாக அஸ்வினியிடம், கணவர் ராஜேந்திரன் கூறிச் சென்றுள்ளார்.

உடனடியாக செல்ஃபோன் மூலம் தனது கணவர் ரயிலில் திருத்தணி செல்லும் தகவலை அனுராக்கிற்கு தெரிவித்துள்ளார். அவர் தனது தம்பி மற்றும் நண்பருடன் சேர்ந்து தங்கள் மீது கொலை பழி வராமல் இருக்க, ராஜேந்திரனின் மரணம் விபத்து போல் இருக்க வேண்டும் என்பதற்காக ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது ரயில் மெதுவாக சென்றதால், கீழே விழுந்ததில் ராஜேந்திரன் உயிருக்கு ஆபத்தில்லாமல் படுகாயங்களுடன் தப்பியுள்ளார். இதையடுத்து அஸ்வினி,  அவரது ஆண் நண்பர் அனுராக், கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : #WOMAN #CHENNAI #WIFE #HUSBAND