கல்யாணமாகி 2 வருஷம் தான்... கிணற்றில் இருந்து... சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்... அதிர்ந்துபோன பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 02, 2020 10:42 AM

ஈரோடு அருகே திருமணமான 2 வருடங்களில் 10 மாத குழந்தை உள்ள நிலையில், இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

erode woman died in mysterious circumstances over issue

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கும் அந்தியூர் எண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்புதான் தடபுடலாக திருமணம் நடைப்பெற்றது. . இந்தத் தம்பதிக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று இரவு முதல் சுகன்யாவை காணவில்லை என்பதால் பதறிப்போன அவரது கணவரும், உறவினர்களும் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சுகன்யா கிடைக்கவில்லை.

காலையில் வீட்டின் அருகே இருந்த கிணற்றில், இளம்பெண் சுகன்யா சடலமாக மிதந்ததைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த போலீசார் சுகன்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, வரதட்சனை கொடுமையால் தங்கள் மகள் உயிரிழந்ததாக சுகன்யாவின் பெற்றோர் புகார் கொடுக்க, அதன்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, சுகன்யாவின் பெற்றோரிடம் தொழில் தொடங்குவதற்காக கணவர் சந்திரசேகர் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால் வெகு நாட்கள் ஆகியும் கடனை திருப்பித் தராததால், தனது பெற்றோரிடம் வாங்கிய கடனை திருப்பித் தாருங்கள் என கணவர் சந்திரசேகரிடம் மனைவி சுகன்யா கேட்டு வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்  இளம்பெண் சுகன்யா விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வரதட்சணை கொடுமையால் சுகன்யா உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 வருடங்களே ஆகியுள்ளதால், சுகன்யாவின் மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடைப்பெற்று வருகிறது. மர்மமான முறையில் இறந்ததால் இளம்பெண் சுகன்யா இறந்ததால், அவரது 10 மாத பெண் குழந்தை, தாய் இன்றி தவித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #WOMAN #DIED #ERODE #HUSBANDANDWIFE