'10 லட்சத்தைத்' தாண்டிய 'கொரோனா பாதிப்பு...' '53 ஆயிரத்தைக்' கடந்த 'பலி எண்ணிக்கை...' 'உலகை' 'புரட்டிப் போடும்' கொரோனா...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்று மிகக் கடுமையாக கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 10 லட்சத்து 15 ஆயிரத்த 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 884 பேர் உயிரிழந்தனர். இதேபோல் ஸ்பெயினிலும் ஒரேநாளில் 864 பேர் ஒரேநாளில் உயிரிழந்தனர். பிரிட்டனில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 563 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் ஒன்றாம் தேதியை மிக துயரமான நாள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் இருநாடுகளிலும் பத்தாயிரத்தை கடந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 993 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகளில் வேலையிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிரிட்டனில் சுமார் 27 விழுக்காடு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. சுமார் 32 ஆயிரம் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயினில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 9 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.