'வீடியோ கேம்' மூலம்... கல்வி கற்பது எப்படி!?'... மாநாட்டை மிரளவைத்து... 'சத்யா நாதெள்ளா'வை வியக்கவைத்த... 7ம் வகுப்பு சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீடியோ கேம் மூலம் கல்வி கற்றுக்கொள்வது எப்படி என மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி வகுப்பு எடுத்து வரும் சம்பவம் மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உட்பட பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான மாநாடு இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் நம்யா ஜோஷி என்ற மாணவி கலந்து கொண்டார்.
அந்த மாநாட்டில் பேசிய மாணவி நம்யா, இன்றைய காலத்தில் மாணவர்கள் புத்தகங்களை வாசிக்கவும், படிக்கவும் விரும்புவதில்லை எனவும், வீடியோ கேம் போன்ற நவீன பொழுது போக்கு அம்சங்களை மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். அதனால், அவர்கள் அதிக நேரம் செலவு செய்யும் வீடியோ கேம் வாயிலாக கல்வி கற்றுக்கொள்வது எப்படி என்பதை மாணவி நம்யா விளக்கத் தொடங்கினார்.
அப்போது, மைன் கிராஃப்ட் என்னும் வீடியோ கேம் மூலம் வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களை எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும் என்பதை தெளிவாக விவரித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த புதிய கற்றல் முறையை உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, தான் ஸ்கைப் மூலமாக கற்பித்து வருவதாகவும் தெரிவித்தார். இவருடைய கற்றல் முறை அந்த மாநாட்டில் குழுமியிருந்த மைக்ரோசாஃப்ட் மென் பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உட்பட பலரையும் வெகுவாக ஈர்த்தது.
இந்நிலையில், சத்யா நாதெள்ளா பேசுகையில், இந்த காலத்து மாணவர்கள் மிகவும் அறிவாளிகளாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், மாணவி நம்யா ஜோஷியின் புதிய முயற்சி தன்னை வெகுவாக கவர்ந்துவிட்டதாகவும் கூறினார். கல்வியில் தொழில் நுட்பத்தை புகுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Image credit: PTI
