'படிக்கறது 9-ம் வகுப்பு தான்'... 'நாசாவுக்கு போகும்'... 'நாமக்கல் அபிநயா'... 'அப்டி என்ன செஞ்சாங்க'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவி அபிநயாவை பாராட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, இந்தியா முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவியருக்கு இணையம் வாயிலாக அறிவியல் தேர்வு நடத்தியது. இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 9-ம் வகுப்பு படித்து வரும் அபிநயா என்ற பள்ளி மாணவி பங்கேற்று, தேர்வில் வெற்றி பெற்று நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாணவிக்கு தமிழக அரசு சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாணவி அபிநயா அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியாகும். விண்வெளித்துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி அபிநயா கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித்துறையில் இதுபோன்று பற்பல சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமெனவும் இத்தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.
நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதையொட்டி, அபிநயாவின் சாதனையினை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும், அபிநயாவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
