அந்த முடிவு எடுக்குற ‘அதிகாரம்’ எனக்கு மட்டும்தான் இருக்கு.. அதிபர் ‘டிரம்ப்’ அதிரடி..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஊரடங்கை தளர்த்தும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கி 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஊரடங்கை தளர்த்தி வணிக நிறுவனங்களை திறக்கும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநர்களுக்கும் கிடையாது என்றும், அந்த அதிகாரம் தனக்கே உரியது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், நியூயார்க், லூசியானா, மிச்சிகன் போன்ற பகுதிகளில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், மற்ற மாகாணங்களில் பெரும் பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்படும் என்றும், ஆனால் எந்தெந்த மாகாணங்கள் என்பதை தற்போது கூறமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தளர்த்தும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநர்களுக்கும் கிடையாது என்றும், அது தனக்கே உரிய அதிகாரம் என்றும் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.