'அசால்ட்டாக கை கொடுத்த புதின்'... 'கொஞ்ச நேரத்துல டாக்டருக்கு நடந்த சோகம்'... ரஷியாவில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த டாக்டருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது, கடும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 42 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா பாதிப்பு ரஷியாவில் கட்டுக்குள் இருந்த நிலையில், அந்நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 337 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரித கதியில் எடுத்து வருகிறது.
இதற்கிடையே மாஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ரஷிய அதிபர் சென்றார். அப்போது அங்கிருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் அங்குள்ள நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். இதையடுத்து அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டென்னிஸ் புரோட்சென்கோவிடமும் ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கிளம்புவதற்கு முன்பு, தலைமை மருத்துவர் டென்னிஸ்யுடன் கைகளை குலுக்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினார். புதின் மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து முகத்தில் மாஸ்க், மற்றும் கையில் கையுறை போன்ற பாதுகாப்பு சாதனைகளை அணியவில்லை. இந்த சூழ்நிலையில் புதினுடன் பேசிய மருத்துவ தலைமை டாக்டர் டென்னிஸ் புரோட்சென்கோவுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டென்னிஸ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் புதின் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினை சந்தித்த டாக்டருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரஷியாவில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
