'நேற்று ஒரேநாளில் நிகழ்ந்த அதிர்ச்சி...' 'இரண்டு மாநிலங்களில் இருமடங்கான பாதிப்பு...' 'நாட்டில்' மிக மோசமாக பாதிக்கப்பட்ட 'மாநிலம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களை விட, நேற்று இரண்டு மடங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் 82, தமிழ்நாட்டில் 57 பேர் ஒரேநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக டெல்லி உருவெடுத்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,618ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் புதிதாக 626 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மொத்த பாதிப்பில் 40 சதவீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. டெல்லியில் மொத்த பாதிப்பு 120ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரேநாளில் மொத்த பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது என்றே கூறலாம். அதாவது 67ல் இருந்து 124ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 241 என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருந்த ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 66ஆக அதிகரித்துள்ளது. மேற்குவங்கத்தில் 3 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். புதிதாக 15 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பீகாரில் 16 பேருக்கும், குஜராத்தில் 74 பேருக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
