'ஒரு செல்ஃபி மட்டும் எடுத்து அனுப்புங்க, உடனே...' கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள 'கொரோனா மானிட்டரிங்' ஆப்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் கொரோனா மானிட்டரிங் என்ற செயலியை சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகையே தாக்கிவரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு கொரோனா வைரஸிலிருந்து பொது மக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்வேறு நலத்திட்டங்களையும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி செல்போனில் உபயோகிக்கும்படி ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இந்த செயலியை தொடங்கி வைத்தார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் முறையையும், பயன்படுத்தும் முறையையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த செயலியானது பெருநகர சென்னை மாநகராட்சி வலைத்தளத்திற்கு சென்று அங்கு காணப்படும் கொரோனா மானிட்டரிங் (சிகப்பு நிறத்தில் இருக்கும்) என்பதை கிளிக் செய்தால் உடனடியாக செல்போனில் தரவிறக்கம் ஆகிவிடும். சென்னை மாநகராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டு, கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறது என்ற சந்தேகம் இருந்தால் இந்த செயலியை பயன்படுத்தி செல்பி எடுத்து அனுப்பவேண்டும். அதன் பின் புகைப்படத்தின் மூலம் அனுப்பிய நபரின் வீட்டுக்கு மருத்துவத்துறையை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதிக்க நேரடியாக அனுப்பப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து கொரோனா தொற்றா அல்லது சாதாரண காய்ச்சலா என்பதை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செயலியானது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
